

இனி மின் தடை தொடர்பான புகார்களை வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாகவே எளிதாகப் பதிவு (மின்வெட்டு புகார்) செய்யலாம். பொதுமக்கள் தங்களின் மின் தேவைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் “TNEB WhatsApp Chatbot" வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் (TANGEDCO) அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இரவு நேர மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் மின்சார வாரிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மின் பற்றாக்குறை எதுவும் இல்லை என்று தினம் தோறும் அமைச்சர் நிர்மல்குமார் கூறி வரும் நிலையில், ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறதுஇதனால் தவெக ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்படாத மின்வெட்டு அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. திடீர் திடீர் என மின் தடை ஏற்படுவதால் மக்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். காற்றாலை மின் உற்பத்தி குறைந்து இருப்பதாகவும், அண்டை மாநிலங்களில் கூட மின் தட்டுப்பாடு இருப்பதாகவும் தவெக அமைச்சர்கள் சாக்குபோக்கு கூறியதையும் பார்க்க முடிந்தது.
தலைநகர் சென்னை முதல் கடைகோடியில் இருக்கும் கன்னியாகுமரி வரை பாரபட்சம் இல்லாமல் அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்வதாக மக்கள் வேதனைபட்ட நிலையில், கடந்த 23 ஆம் தேதி மின்னகத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், 'மக்களுக்கு தடையற்ற மற்றும் சீராக மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என மின் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முதல்வர் விஜய் ஆய்வுக்கு பிறகு மின் வெட்டு குறையும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், பழைய கதையே தொடர்வதை பார்க்க முடிகிறது.
மேலும் மின்தடைக்கான காரணங்கள் உள்கட்டமைப்பு சார்ந்தவை என்று தவெக அரசு விளக்கமளித்தாலும், தொடர் மின்தடைகளால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாவதை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் தங்களின் அரசியல் விமர்சனங்களைத் தொடர்ந்து முன்வைத்து வருகின்றன.
தவெக அரசு மற்றும் மின்சார வாரியம் இந்த விமர்சனங்களை மறுக்கின்றன. மின்தடைப் புகார்களுக்கு உடனடியாகத் தீர்வு காண 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், ‘மின்துறை சேவைகள் தொடர்பான புகார்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் “TNEB WhatsApp Chatbot" வசதியை அறிமுகப்படுத்தி இருப்பதாகவும், மின்சார புகார்களை பதிவு செய்ய 94987 94987 என்ற வாட்ஸ் அப் எண்ணில் “HI” என பதிவிட வேண்டும் என்றும் அலைபேசி எண் அல்லது மின் இணைப்பு எண் மூலம் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவர் கூறியிருக்கிறார்.
மின் தடை, மின் கம்பி அறுந்து விழுதல், சேதமடைந்த மின் கம்பங்கள் போன்ற புகார்களைப் புகைப்பட ஆதாரத்துடன் இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யலாம்.
9498794987 என்ற எண்ணை உங்கள் மொபைலில் சேமித்துக் கொள்ளவும். பின்னர் அந்த வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘Hi’ என அனுப்பி மின்தடை உள்ளிட்ட புகார்களை பதிவு செய்யலாம். மின் கம்பம் சேதம் அல்லது ஆபத்தான மின்கம்பிகள் இருந்தால், அதனைப் படம் பிடித்து அனுப்பலாம்.
புகார்கள் தானியங்கி முறையில் பதிவு செய்யப்பட்டு அவற்றுக்கு விரைவில் தீர்வு காணும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு புகார்கள் எழுந்துள்ள நிலையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.