

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் குரூப் தேர்வு நடக்கவுள்ளது. இதற்கான விண்ணப்ப காலம் தற்போது நடைமுறையில் இருக்கும் சூழலில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் உச்ச வயதை அடைந்த போட்டித் தேர்வர்களும் விண்ணப்பிக்க முடியும்.
கடந்த சில ஆண்டுகளாக போட்டித் தேர்வுகளுக்கான உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாட்டில் உள்ள போட்டித் தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை தற்போதைய விதிகளில் உள்ளதை விட 5 ஆண்டுகள் உயர்த்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கண்ட இந்த வயது வரம்பு உயர்வானது, இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (BC, BC(M), MBC & DNC, SC, ST, ஆதரவற்ற விதவைகள்) ஏற்கனவே உள்ள வயதுச் சலுகையோடு கூடுதலாக அமையும்.
இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (30.10.2026) முதல் 5 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும். தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவின் மூலம், வயது வரம்பு முடிவடையும் நிலையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பயனடைவர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு வாரியாக வயது வரம்பு உயர்வு விவரம்:
குரூப் 1:
* குரூப் 1 தேர்வுகளைப் பொறுத்த வரை பொதுப்பிரிவினருக்கு 32 வயதில் இருந்து 37 ஆகவும், ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37-ல் இருந்து 42 ஆகவும்வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.
* மாற்றுத்திறனாளிகள் பொதுப்பிரிவினருக்கு 42-ல் இருந்து 47 ஆகவும், ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 47-ல் இருந்து 52 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
குரூப் 2 & 2ஏ:
* குரூப் 2 & 2ஏ தேர்வுகளைப் பொறுத்த வரை பொதுப்பிரிவினருக்கு 30 வயதில் இருந்து 35 ஆகவும், மாற்றுத்திறனாளிகள் பொதுப்பிரிவினருக்கு 40-ல் இருந்து 45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
* ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
குரூப் 4:
* குரூப் 4 தேர்வுகளைப் பொறுத்த வரை பொதுப்பிரிவினருக்கு 30 வயதில் இருந்து 35 ஆகவும், மாற்றுத்திறனாளிகள் பொதுப்பிரிவினருக்கு 40-ல் இருந்து 45 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
* டிகிரி முடித்த இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளி ஒதுக்கீட்டு பிரிவினருக்கு குரூப் 4 தேர்வில் உச்ச வயது வரம்பு இல்லை.
* குரூப் 4 தேர்வுக்கு டிகிரி அல்லாமல் உரிய கல்வித் தகுதியைப் பெற்றிருக்கும் ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 32-ல் இருந்து 37 ஆகவும், மாற்றுத்திறனாளி ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 37-ல் இருந்து 42 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
* ஒதுக்கீட்டுப் பிரிவில் SC, ST மற்றும் விதவைகளுக்கு 35-ல் இருந்து 40 ஆகவும், மாற்றுத்திறனாளி SC, ST மற்றும் விதவைகளுக்கு 45-ல் இருந்து 50 ஆகவும் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.