

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி என்றாலே பட்டாசு தான் பலருக்கும் நினைவுக்கு வரும். முன்பெல்லாம் பட்டாசு வெடிப்பதற்கு என்று நேரம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதற்கு 2018-ல் நேரக் கெடு கொண்டு வரப்பட்டது.
உச்சநீதிமன்ற உத்தரவுப் படி தீபாவளி பண்டிகையின் போது மொத்தமாகவே 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படும். தமிழ்நாட்டில் காலையில் 1 மணி நேரமும், மாலையில் 1 மணி நேரமும் பட்டாசு வெடிக்க நேரம் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது காற்று மற்றும் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு தான் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் நேரக் கட்டுப்பாடு என்ற வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது. இதன்படி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை அதிகாலை முதலே கொண்டாடப்படுவதால், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, 2 மணி நேரத்தை இரண்டாக பிரித்து நிர்ணயித்துக் கொள்ள மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கியது உச்ச நீதிமன்றம்.
தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரம்:
* காலை 06:00 மணி முதல் 07:00 மணி வரை - 1 மணி நேரம்
* மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை - 1 மணி நேரம்
வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அமைதிப் பகுதிகள் என அறிவிக்கப்பட்ட சில குறிப்பிட்ட இடங்களில் பட்டாசுகளை வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பசுமைப் பட்டாசுகள்:
சாதாரண பட்டாசுகளை காட்டிலும் 30% முதல் 35% வரை குறைந்த புகை மற்றும் குறைந்த ஒலியை உருவாக்கும் வகையில் பசுமைப் பட்டாசுகள் தயாரிக்கப்படும். தீபாவளி பண்டிகைக்கு பசுமைப் பட்டாசுகளை வெடித்தால், காற்று மாசுபாடு ஓரளவு கட்டுக்குள் இருக்கும். ஆனால் சந்தையில் சீன பட்டாசுகள் கலந்து விடுவதால், பசுமைப் பட்டாசுகளை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படும். இருப்பினும் ஒருசில குறிப்புகளைக் கொண்டு பசுமைப் பட்டாசுகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
பசுமைப் பட்டாசுகளை அடையாளம் காண்பது எப்படி?
* பசுமைப் பட்டாசுகளின் மீது CSIR-NEERI என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பச்சை நிற லோகோ மற்றும் QR கோடு இருக்கும். இதனை மொபைலில் ஸ்கேன் செய்து பார்த்தால் பட்டாசு தயார் செய்த இடம், உரிம எண் மற்றும் ரசாயனக் கலவை உள்ளிட்ட தகவல்கள் இருக்கும்.
* போலியான பட்டாசுகளில் இருக்கும் QR கோடு வேலை செய்யாது. மக்களை ஏமாற்ற போலியான QR கோடு ஒட்டப்பட்டிருக்கும்.
* பசுமைப் பட்டாசுகளின் பெட்டியில் SWAS, STAR, மற்றும் SAFAL ஆகிய மூன்று வகைகளில் ஏதேனும் ஒன்றின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும்.
* பசுமைப் பட்டாசுகளில் ஆர்சனிக், ஈயம், பேரியம் நைட்ரேட் மற்றும் லித்தியம் உள்ளிட்ட நச்சுத்தன்மை வாய்ந்த உலோகங்கள் சேர்க்கப்படாது.
* சட்டப்படி தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகள், பசுமைப் பட்டாசு வகையில் வராது.
* அரசின் உரிமம் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட பட்டாசு கடைகளில் உரிய ரசீதுடன் பட்டாசுகளை வாங்குவதே மிகவும் பாதுகாப்பானது.