
தமிழ்நாட்டில் அரசு வேலைக்கான காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் படி அறுவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
கடந்த ஜூன் 15 ஆம் தேதி டிஎஸ்பி, துணை ஆட்சியர், உதவி இயக்குநர், உதவி ஆணையர் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் உள்ளிட்ட 70 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை எழுத 2 இலட்சத்து 49 ஆயிரத்து 294 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் தமிழ்நாடு முழுக்க 44 தேர்வு மையங்களில் 1 இலட்சத்து 86 ஆயிரத்து 126 பேர் மட்டுமே தேர்வை எழுதினர்.
இத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், அதுகுறித்த விவரங்களை https://tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம். கீழ்க்கண்ட இணைய லிங்கை கிளிக் செய்தும் முடிவைகளைத் தெரிந்து கொள்ளலாம் https://tnpsc.gov.in/document/finalresult/04_2025_GR_I_PUB_LIST_28.08.2025.pdf. தேர்வு முடிவுகள் யாருக்கும் தபால் மூலம் தெரிவிக்கப்படாது என்பதையும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகின்ற டிசம்பர் 01 முதல் 04 ஆம் தேதி வரை சென்னையில் முதன்மைத் தேர்வு நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கு உரிய ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றி, ரூ.200 தேர்வுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டண விலக்கு கோரும் தேர்வர்கள் அதற்குரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும். செப்டம்பர் 3 முதல் 12 ஆம் தேதி வரை தேர்வர்கள் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 அரசு வேலைக்கு 20 தேர்வர்கள் போட்டி என்ற நிலையில் முதன்மைத் தேர்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், குரூப் 4 தேர்வு முடிவு விரைவில் வெளியாகும் என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர்.