
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித் தேர்வுகளில் குரூப்4 தேர்வு தான் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஏனெனில் இத்தேர்வை எழுத 10-ம் வகுப்பு படிந்திருந்தால் போதும் என்பதால், விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை எப்போதுமே அதிகமாக இருக்கும். நடப்பாண்டு 3,935 காலிப் பணியிடங்களுக்கான குரூப்4 தேர்வு ஜூலை 12 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற்றது.
இத்தேர்வின் மூலம் வாரியங்கள், அமைச்சுப் பணிகள், வனத்துறைப் பணிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இருக்கும் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு முடிவுகள் மூன்றே மாதத்தில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், வருகின்ற அக்டோபர் மாதத்தில் முடிவுகள் வெளியாகும் எனத் தெரிகிறது.
நடப்பாண்டு நடைபெற்ற குரூப்4 தேர்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்களும், கல்வி வல்லுனர்களும் தெரிவித்தனர். இந்நிலையில் மறு தேர்வு நடத்த வேண்டும் என தமிழ்நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இருப்பினும் எதையும் கண்டு கொள்ளாத டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், முடிவுகளை வெளியிடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த மாதம் விடைக்குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இதில் கிட்டத்தட்ட 10 கேள்விகளுக்கும் மேல் தவறான விடையை டிஎன்பிஎஸ்சி பரிந்துரைத்ததாக தேர்வர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் அக்டோபர் மாதத் தொடக்கத்தில் இறுதியான விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டு, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்வு முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் கிரேஸ் மதிப்பெண்கள் ஏதேனும் கிடைக்குமா எனத் தேர்வர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர். அதோடு கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு இருக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.
வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால் 150 முதல் 153 வரை கட் ஆஃப் இருக்கும் எனக் கூறப்படுகிறது. 3 முதல் 4 கிரேஸ் மதிப்பெண்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி தமிழ்ப் பாடத்தில் 80, பொது அறிவில் 52 மற்றும் கணிதப் பாடத்தில் 20 கேள்விகளுக்கு சரியான விடையளித்திருந்தால் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை கிரேஸ் மதிப்பெண்கள் வழங்கப்பட்டால், கட் ஆஃப் உயருமே தவிர வேறு பலன்கள் கிடைக்காது.
கலந்தாய்வின் போது எப்போதும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி உயர்த்தும். இம்முறையும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இது நடந்தால் கட் ஆஃப் மதிப்பெண் 148 முதல் 149 ஆக குறையவும் வாய்ப்புள்ளது.
எப்படி இருந்தாலும் 150-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையளித்து இருந்தால், அரசு வேலை நிச்சயமாக கிடைக்கும் என டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.