

டிஎன்பிஎஸ்சி மூலம் காலிப் பணியிடங்களை நிரப்ப முதல்வர் அலுவலகத்தில் தீவிர ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் இதுகுறித்து வரும் பட்ஜெட் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதனால் அரசு வேலைக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான தேர்வர்கள் குஷியாகி உள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி காலிப் பணியிடங்கள் :
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி - TNPSC) என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பாகும். இது இந்தியாவில் மாநில அளவில் உருவாக்கப்பெற்ற முதல் தேர்வாணையமாகும்.
அந்த வகையில் தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள், டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்பட்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசும் தேர்தலில் வெற்றி பெற தனது தேர்தல் வாக்குறுதிகளில் டிஎன்பிஎஸ்சியில் காலி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படும் என்று சொல்வது வழக்கம். ஆனால் நிஜத்தில் ஆட்சிக்கு வந்த சொன்ன வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு சொற்ப இடங்கள் மட்டும் நிரப்பப்படுவது தொடர் கதையாகயே இருந்து வருகிறது.
இந்த நிலையில் நடத்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட கட்சியை வீழ்த்தி தவெக அரசு முதல்முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற தவெக தலைவர் விஜய் தமிழகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து இதை சிறப்பாகவும் வழிநடத்தி வருகிறார். மேலும் தமிழகத்தின் நிதி நிலைமைகளை ஆய்வு செய்து, தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றித் தருவேன் என்று உறுதியளித்திருந்தார்.
இதற்கிடையே, தவெக அரசு பொறுப்பேற்ற பின், தமிழ்நாடு அரசின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ம்தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம் பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் (6-ந் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.
முதல் நாளில், 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சனும், அடுத்த நாள், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத்தும் தாக்கல் செய்ய உள்ளனர். தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதமும், அமைச்சர்களின் பதிலுரையும் இடம்பெறும். அதன்பின்னர், துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும்.
மாநில அரசின் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய புதிய திட்டங்கள், நடைமுறையில் உள்ள திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் துறைகளின் முன்னேற்றம் ஆகியவை குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் கடந்த ஜூலை 2-ம்தேதி முதல் துறைரீதியான ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வு கூட்டம் துறைவாரியாக நேற்று (ஜூலை 22-ம்தேதி) நடைபெற்றது. இதன் அடிப்படையில் நிதிநிலை அறிக்கைகள் தயாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சியில் காலி இடங்களை விரைந்து நிரப்புவது தொடர்பான இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொதுவாக, அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தினாலும், எந்தெந்த துறைகளில் எவ்வளவு பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது தொடர்பான தரவுகளை அந்தந்த அரசுத் துறைகள்தான் தேர்வாணையத்திடம் முறையாகச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறைகளைத் துரிதப்படுத்துவது குறித்து முதலமைச்சர் அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், பல்வேறு தமிழ்நாடு அரசுத் துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு தங்களது துறை சார்ந்த விவரங்களைப் பகிர்ந்துள்ளனர்.
அரசுத் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் நேரடியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளதால், வரும் பட்ஜெட்டில் அரசுப் பணிகளுக்கான கூடுதல் காலிப் பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற தகவல் கசிந்துள்ளதால் அரசு வேலைக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான தேர்வர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால், பல்வேறு தரப்பினரும் அவர்களுக்கான அறிவிப்புகள் ஏதாவது இதில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பில் ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர்.