ஆகஸ்ட் 5 பட்ஜெட்... ஆகஸ்ட் 6 வேளாண் பட்ஜெட்! தமிழக சட்டப்பேரவையில் நேரலைக்கு ஏற்பாடு!

ஆகஸ்ட் 5-ல் முதல்வர் விஜய் தலைமையில் முதல் பட்ஜெட்..!
தமிழக பட்ஜெட்
TN Budget
Updated on

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையான இடங்களை வென்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. கடந்த மே 10-ம் தேதி தமிழகத்தின் புதிய முதல்வராக தவெக தலைவர் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

அரை நூற்றாண்டுக்குப் பிறகு முதன்முறையாக தமிழக அமைச்சரவையில் கூட்டணி கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதன்படி காங்கிரஸ், விசிக மற்றும் ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற முதல்வர் விஜய், ஆரம்பம் முதலே பல்வேறு அதிரடியான மற்றும் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு, லஞ்சம் ஒழிப்பு மற்றும் போதை ஒழிப்பு உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறார் தமிழக முதல்வர்.

இந்நிலையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் கடந்த ஒரு மாதமாக இருந்து வந்தது. இதன்படி ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என சில தினங்களுக்கு முன்பு நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் சற்றுமுன் தவெக அரசின் முதல் பட்ஜெட் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்.

இதையும் படியுங்கள்:
ஷாக்.. கிடுகிடு உயர்வு.. 2-வது நாளாக உயர்ந்தது தங்கம்.!
தமிழக பட்ஜெட்

முதல்வர் விஜய் தலைமையில் வெளியாக போகும் முதல் பட்ஜெட் இது என்பதால், ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனமும் பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வரப் போகிறது என்பதை இப்போதே எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி குறித்து இன்று (ஜூலை 21) சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சபாநாயகர் வெளியிட்ட அறிவிப்பில், “2026-27 நிதி ஆண்டிற்கான தமிழக வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 10 மணிக்குச் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படும். இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6-ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பட்ஜெட் தாக்கலை தமிழக மக்கள் நேரலையில் பார்க்க ஏற்பாடு செய்யப்படும். வக்களித்தவர், வாக்களிக்காதவர் என அனைவரும் போற்றும் வகையில் பட்ஜெட் இருக்கும். வந்தே மாதரம் குறித்த விவகாரத்தில் பேரவையில் ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும்” என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் முதல்வர் விஜய்யை ஒருமையில் விமர்சித்ததற்காக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து பேசி சபாநாயகர் சட்டப் பேரவைக்குள் எம்எல்ஏக்களை கைது செய்யத் தான் பேரவைத் தலைவரின் அனுமதி தேவை. சட்டப்பேரவைக்கு வெளியில் கைது நடவடிக்கையை மேற்கொண்டால், அதற்கு பேரவைத் தலைவரின் அனுமதி தேவையில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

TN Budget
TN Budget
இதையும் படியுங்கள்:
ஆகஸ்ட் 20 வரை விண்ணப்பிக்கலாம்: இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!
தமிழக பட்ஜெட்

முதல்வர் விஜய் தலைமையில் வருகின்ற ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆகிய இரண்டு நாட்களில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இதற்கு முன்னதாகவே பல துறை நிபுணர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்களை சேர்க்க வேண்டும்; எந்தெந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும்; மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் எவை என்பது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக கடந்த மாதம் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.1 லட்சத்திற்கும் மேல் கடன் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தவெக அரசு தாக்கல் செய்யவுள்ள முதல் பட்ஜெட்டில், என்னென்ன சீர்திருத்தங்கள், மாற்றங்கள் இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள் வெளியாகப்போகிறது என மக்கள் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக மதிப்புமிகு மகளிர் திட்டம் ரூ.2500, தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், இலவச 6 சிலிண்டர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com