

உங்களிடம் உள்ள 10 லட்சம் ரூபாயை 15 லட்சமாக மாற்ற தமிழக அரசு சூப்பரான திட்டத்தை வைத்துள்ளது. தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு போக்குவரத்து அபிவிருத்தி நிதிக் கழகம் (TNTDFC), நிலையான வைப்புத்தொகைகளுக்கு (Fixed Deposits) மிகவும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகிறது. தமிழக அரசுக்குச் சொந்தமான இந்நிறுவனம், இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசு சாரா நிதி நிறுவனமாக (NBFC-D) செயல்பட்டு வருகிறது. இதனால் இதில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
இந்த திட்டத்தில் போஸ்ட் ஆபிஸை விட அதிகமாக வட்டி வழங்கப்படுகிறது. போஸ்ட் ஆபிஸில் அதிகபட்சமான வட்டியே 8.2 சதவீதம் மட்டுமே. ஆனால் தமிழ்நாடு அரசின் இந்த திட்டத்தில் 8.75 சதவீதம் வட்டி கொடுக்கப்படுகிறது. இதையே கூட்டு வட்டி போட்டு கணக்கு பார்த்தால் 10.80 சதவீதம் கண்டிப்பாக கிடைக்கும்.
இப்போது இந்த லாபகரமான திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இந்த வைப்பு நிதி திட்டம் நம்முடைய தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ‘தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி கழகம்’ தான் கொடுக்கிறார்கள். இதில் காலமுறை வட்டி செலுத்தும் திட்டம் மற்றும் பணம் பெருக்கும் திட்டம் என இரண்டு திட்டங்கள் உள்ளது.
இதில் முதலாவது காலமுறை வட்டி செலுத்தும் திட்டத்தின் (Periodic Interest Payment Scheme-PIPS) மூலம் உங்கள் முதலீட்டிற்கான வட்டியை மாதந்தோறும், மூன்று மாதங்களுக்கு (காலாண்டு) ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை என உங்கள் தேவைக்கேற்ப வழக்கமான வருமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். ஓய்வூதியம் போல மாதந்தோறும் வழக்கமான வருமானம் தேவைப்படும் மூத்த குடிமக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இரண்டாவது ‘பணம் பெருக்கும் திட்டம்’(money multiplier scheme- MMS) என்பது இத்திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கான வட்டி, குறிப்பிட்ட கால இடைவெளியில் கூட்டு வட்டியாக (Compound Interest) கணக்கிடப்பட்டு, முதிர்வுக் காலத்தின் (Maturity) இறுதியில் அசலுடன் சேர்த்து மொத்தமாக வழங்கப்படும்.
அதாவது, இந்த திட்டத்தில் உங்கள் பணத்தை குறைந்தது 12 மாதங்களில் இருந்து 60 மாதங்கள் (5 ஆண்டுகள்) வரைக்கும் டெபாசிட் செய்ய வேண்டும். நீங்கள் தேர்வு செய்ய அந்த காலக்கெடு முடிந்து மெச்சூரிட்டி ஆனபிறகு அசலையும், வட்டியையும் சேர்த்தே வாங்கிகொள்ளும் முறையாகும்.
வட்டித் தொகையை மாதாமாதம் எடுக்காமல், சில வருடங்கள் கழித்து பெரிய தொகையாக (உதாரணமாக ₹10 லட்சத்தை ₹15 லட்சமாக மாற்ற) பெற நினைப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த தேர்வு.
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமாக விஷயம் என்னவென்றால் இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.50,000க்கு மேல் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். ரூ.50,000க்கு மேல் எத்தனை கோடி வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம்.
பொது மக்களுக்கு சுமார் 8.00% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு (Senior Citizens) கூடுதல் சலுகையாக 60 மாத கால முதலீட்டிற்கு அடிப்படை வட்டி விகிதமாக 8.50% முதல் 8.77% வரையிலும் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. கூட்டு வட்டி மற்றும் பணப் பெருக்குத் திட்டத்தின் (MMS) மூலம் இதன் பயனுள்ள வட்டி ஈவு (Effective Yield) 10.46% வரை உயர்கிறது.
அரசுக்குச் சொந்தமான நிறுவனம் என்பதால், தனியார் நிதி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இதில் முதலீட்டு அபாயம் (Risk) மிக மிகக் குறைவு.
இப்போது இந்த திட்டத்திற்கு வீட்டில் இருந்துகொண்டே எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவோ (TNTDFC அதிகாரப்பூர்வ தளம்) அல்லது அவர்களின் பதிவு அலுவலகங்கள் மூலமாகவோ பெற்று, செக் (Cheque) அல்லது NEFT/RTGS மூலமாக முதலீடு செய்யலாம். ரொக்கமாகப் பணம் செலுத்த அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க, கூகுள் (Google) சென்று tdfc என்று டைப் செய்து அந்த லிங்க்கின் உள்ளே செல்லவும்.
உள்ளே சென்று வலதுபக்கம் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்தால் Tamilnadu Transport Development Finance Corporation ltd என்று காட்டும்.
அதில் Online Remittance என்பதை கிளிக் செய்து உள்ளே சென்று பச்சை நிறத்தில் இருக்கும் PROCEED - ONLINE DEPOSIT REMITTANCE PORTAL என்பதை தேர்ந்தெடுத்து உள்ளே சென்று நீங்கள் எவ்வளவு டெபாசிட் செய்ய நினைக்கிறீர்களோ அந்த தொகையை உங்கள் வங்கி கணக்கில் இருந்து அவர்களுடைய வங்கி கணக்கிற்கு அனுப்பி விட்டு, மறக்காமல் அந்த ரசீதை பதிவிறக்கம் செய்து எடுத்து கொள்ளவும்.
அடுத்து நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், பணத்தை செலுத்திய ரசீது, பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக், KYC படிவம் இவை அனைத்திலும் நீங்களே கையொழுத்தை போட்டு, KYC படிவத்தையும் முழுவதும் நிரப்ப வேண்டும். ஒருவேளை நீங்கள் செய்த டெபாசிட்டுக்கு TDS (Tax Deducted at Source - மூலத்தில் வரி பிடித்தம்) பிடிக்கக்கூடாது என்றால், இந்த படிவத்துடன் 121 படிவத்தையும் இணைத்து ஒரு கவரில் போட்டு ரிஜிஸ்டர் தபாலில் சென்னை அனுப்ப வேண்டும்.
இந்த திட்டத்தில் எப்படி சேருவது, இந்த திட்டத்தின் சாதக, பாதகங்கள் என்ன என்பது குறித்து அறிந்து கொள்ள இதே ஆன்லைன் முகவரியில் contact.Us (Tamilnadu Transport Development Finance Corporation ltd -> contact.Us) என்பதை கிளிக் செய்து அதில் உள்ள முகவரி அல்லது இணையதளம் அல்லது தொலைபேசி எண்ணிக்கோ தொடர்பு கொண்டு உங்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து சந்தேகங்களையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இது பணம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் ஏனோதானே என்று இருந்து விடக்கூடாது. இந்த முகவரியில் தொடர்பு கொண்டு உங்களுக்கு இருக்கும் எல்லா சந்தேகங்களுக்கும் தெளிவு கிடைத்த பிறகு முதலீடு செய்வதே மிகவும் சிறந்தது.