

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் கட்டணம் விதிக்க வழிவகுக்கும் வகையில், புதிய சட்ட மசோதவை ஈரான் அரசு தயாரித்துள்ளது. இதனை ஆமோதிக்கும் வகையில் ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனியின் ஆலோசகர் முகமது மொக்பெர் பேசுகையில், போர் முடிவுக்கு வந்த பிறகு ஹார்முஸ் ஜலசந்தியில் "புதிய விதிமுறைகள்" அமலுக்கு வரும் என்றும் கூறியிருக்கிறார்.
உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட எரிவாயுவில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் மிக முக்கியமான கடல்வழிப் பாதை ஹார்முஸ் ஜலசந்தி. உலக எண்ணெயில் 20 சதவீதம் இந்த வழியாக மட்டுமே செல்கிறது. இந்தியா போன்ற நாடுகள் அதிக அளவில் கேஸ், எண்ணெய் இறக்குமதிக்கு ஹார்முஸ் ஜலசந்தியை தான் பயன்படுத்துகிறது.
அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் என்றும் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
இதுதொடர்பான இருநாடுகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் கடந்த 28-ம்தேதி ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்க இணைந்து போர் தொடுத்தன. கோபம் அடைந்த ஈரான், இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளையும், எண்ணெய் கிணறு மற்றும் எண்ணெய் சேமிப்பு கிடங்குகளையும் தாக்குகிறது. அத்துடன் ஹார்முஸ் ஜலந்தியையும் மூடி வைத்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல மிரட்டல்களை விடுத்து வருகிறார். ஆனால், எதற்கும் ஈரான் அசைவதாக இல்லை.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளது.
அமெரிக்காவின் நட்பு நாடுகளை தவிர மற்ற நாடுகள் செல்ல அண்மையில் தான் அனுமதி அளித்தது ஈரான். அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் தொடங்கியதில் இருந்து, தனது எதிரி நாடுகளுடனும் அவர்களது நட்பு நாடுகளுடனும் தொடர்புடையதாகக் கருதப்படும் கப்பல்களின் போக்குவரத்தை ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் அவ்வப்போது தடுத்து வருகிறது. இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டை ஈரான் தளர்த்தவில்லை. இதற்கிடையே ஈரானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தைக்கு உடன்பட எகிப்தின் சூயஸ் கால்வாயை போல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.
இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் கட்டணம் விதிக்க வழிவகுக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவை ஈரான் அரசு தயாரித்துள்ளது.
இதுகுறித்து, ஈரானின் உச்ச தலைவர் அலி காமேனியின் ஆலோசகர் முகமது மொக்பெர் பேசுகையில், போர் முடிவுக்கு வந்த பிறகு ஹார்முஸ் ஜலசந்தியில் "புதிய விதிமுறைகள்" அமலுக்கு வரும் என்றும், இதன் மூலம் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகள் மீது கடல்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை விதிக்க ஈரானால் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியை உத்தியாக பயன்படுத்தி, தங்களுக்கு எதிராகச் செயல்படும் மேற்கத்திய நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கவும், அந்த நாடுகளின் கப்பல்கள் இந்த நீர்வழிப் பாதையைக் கடப்பதைத் தடுக்கவும் தங்களால் முடியும் என்று முகமது மொக்பெர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே ஈரானின் அரசு தொலைகாட்சி ஈரானிய சர்வதேச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல சில கப்பல்களிடம் இருந்து 2 மில்லியன் டாலர்களை வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது. இது இந்திய ரூபாயில் ரூ.18.8 கோடி என்று கூறப்பட்டுள்ளது.
ஈரான் நாடாளுமன்றத்தில் இம்மசோதா விரைவில் இயற்றப்படும் எனவும், ஒரு நாட்டின் வழியாக பொருட்கள் கடந்து செல்லும்போது கட்டணம் வசூலிக்கும் நடைமுறை முற்றிலும் இயல்பானதே எனவும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.