

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நாளை உணவு வழங்க வேண்டும் எனவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 2000 முதல் 3000 பேருக்கு விருந்து அளிக்க வேண்டும் என தவெக மாவட்ட செயலாளர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தலா 3,000 பேருக்கு இலவசமாக உணவு மற்றும் அன்னதானம் வழங்குமாறு தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் உத்தரவிட்டுள்ளார். பட்டினி இல்லாத உலகத்தை உருவாக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட மற்றும் தொகுதி செயலாளர்களுக்கு முதல்வர் விஜய் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
உலகளவில் பட்டினியால் வாடும் மில்லியன் கணக்கான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வறுமைக்கு நிலையான தீர்வுகளைக் கண்டறியவும் 2011-ஆம் ஆண்டு முதல் ‘தி ஹங்கர் ப்ராஜெக்ட்’ அமைப்பால் துவங்கப்பட்ட உலக பட்டினி தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 28 அன்று கடைபிடிக்கப்படுகிறது.
தவெக கட்சியின் சார்பில் தொகுதிக்கு 3,000 நபர்கள் வீதம் மாநிலம் முழுவதும் நாளை பொதுமக்களுக்கு சுவைமிக்க உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படவுள்ளன. மேலும், அனைத்து அம்மா உணவகங்களிலும் தரமான மற்றும் சுவையான உணவு வகைகள் பொதுமக்களுக்குத் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.