

இந்தியா போன்ற ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், 'மொழி' என்பது வெறும் தகவல் பரிமாற்ற கருவி மட்டுமல்லாமல், அது ஒரு கலாச்சார அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்தியாவில் எந்த மொழி அதிகம் பேசப்படுகிறது என்றாலே நம் நினைவுக்கு வருவது இந்தி தான். இந்தி மொழி, அந்தவகையில் இந்தியாவின் கலாச்சார மற்றும் வரலாற்றோடு நெருங்கிய தொடர்புடையது. இது இந்தியாவின் மத்திய அரசுப் பணிகளுக்கான அதிகாரப்பூர்வ மொழியாகவும், கல்வி, ஊடகம் மற்றும் வணிகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, தேசிய அளவிலான நிர்வாகம், கல்வி மற்றும் தகவல் தொடர்பு ஆகிய துறைகளில் இம்மொழி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.
ஆனால், இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி எது என்பது குறித்து வெளியான சமீபத்திய புள்ளிவிவரங்கள் பலருக்கும் ஆச்சரியமான சில தகவல்களைத் தந்துள்ளன.
இந்தியாவில் பல மாநிலங்களில் இந்தி அதிகளவு மக்களால் பேசப்படும் மொழியாக இருப்பதால், இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது ஆச்சரியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதேநேரம் இந்த லிஸ்டில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள மொழிகள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த லிஸ்டில் தமிழ் எந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை அறிந்து கொள்ள அனைவருக்கும் ஆவல் இருக்கும்.
சமீபத்திய மொழியியல் தரவுகளின் அடிப்படையில், இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியாக இந்தி முதலிடத்தில் உள்ளது. இந்தி மொழியை சுமார் 52.83 கோடி பேர் பேசுவதாக கண்டறியப்பட்டுள்ளது. (528-540 மில்லியன்)
இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழிகளின் வரிசையில், சுமார் 97 மில்லியன்(9.73 கோடி பேர்) பேசுபவர்களுடன் பெங்காலி மொழி இரண்டாம் இடத்தில் உள்ளது.
மராத்தி மூன்றாவது இடத்தைப் பிடித்து ஆச்சரியமளிக்கிறது. சுமார் 8.3 கோடி பேர் (83-85 மில்லியன்)பேசும் மொழியாக மராத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியான மராத்தி, அம்மாநில மக்களின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்திக்கும் மராத்திக்கும் இடையே எழுத்துருவில் ஒற்றுமைகள் இருந்தாலும், மராத்தி என்பது தனித்துவமான இலக்கிய வரலாற்றைக் கொண்ட ஒரு தனி மொழியாகும்!
அதைத் தொடர்ந்து 4-வது இடத்தில் சுமார் 8.1 கோடி பேர் (81-83 மில்லியன்) பேசும் மொழியாக தெலுங்கு உள்ளது.
தமிழ் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதாவது சுமார் 6.9 கோடி பேர் (69-78 மில்லியன்) பேசும் மொழியாக தமிழ் உள்ளது.
பிற முக்கிய மொழிகளான குஜராத்தி, உருது, கன்னடம், ஒடியா மற்றும் மலையாளம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இந்தத் தரவரிசையானது வட மற்றும் மேற்கு மொழிகளின் பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது, மேலும் முதல் ஐந்து இடங்களில் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு மற்றும் தமிழ் இடம்பெற்றுள்ளன.