
சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் தமிழ் நாட்டின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் வரும் ஜூன் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. கும்மிடிப்பூண்டிக்கு அருகில் உள்ள எளவூரில் அமைந்துள்ள விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில், மாநில அளவிலான இந்தப் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் யோகா, சிலம்பம், மல்லர் கம்பம் மற்றும் கரலாக்கட்டை போன்ற பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்கிறார்கள். மேலும் இந்த நிகழ்வில் பாரம்பரிய விளையாட்டு வல்லுனர்களும், முக்கிய விருந்தினர்களும் பங்கேற்று, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கி சிறப்பிக்க உள்ளனர்.
இது குறித்து இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் காந்தி உலக மையத்தின் நிறுவனர் ராஜேஷ் கூறியதாவது:
“காந்தி உலக மையத்தின் முக்கிய நோக்கங்களில், பாரம்பரிய விளையாட்டுகளின் பாதுகாப்பும் மற்றும் பரவலாக்க நடவடிக்கைகளை எடுப்பதும் ஒன்று ஆகும்.
நம் பாரம்பரிய விளையாட்டுகள், உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், படைப்பாற்றல், கணிதம், புத்திகூர்மை மற்றும் மன அமைதி ஆகியவற்றை அளிக்கின்றன. எனவே, இந்த விளையாட்டுக் கலைகளைக் கண்டு மகிழவும் கற்றுக் கொள்ளவும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் முயற்சியே இந்த விளையாட்டுத் திருவிழா.
இந்த இரண்டு நாள் நிகழ்வில் முதல் நாள் சிலம்பம் மற்றும் யோகா போட்டிகள் நடக்கின்றன. அன்று மாலை அதற்கான பரிசளிப்பு விழா நடைபெற இருக்கிறது. மறுநாள் மல்லர் கம்பம், கரலாக்கட்டை போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெறும்.
மேலும் துவக்க விழாவின் ஓர் அங்கமாக, உலகில் முதல் முறையாக, பிரமாண்ட கட்டமைப்புடன் கூடிய கயிறு மல்லர் கம்பத்தில் 100 மாணவ மாணவியர்கள் ஒரே நேரத்தில் கயிற்றில் தொங்கியபடி 15 வகையான செயல் முறைகளை தொடர்ச்சியாக 15 நிமிடங்கள் செய்து உலக சாதனை நிகழ்த்தவுள்ளனர். இந்நிகழ்வு வேர்ல்ட் புக் ஆப் அச்சீவர்ஸ் (world book of achievers) மற்றும் இந்தியா புக் ஆப் அச்சீவர்ஸ் (india book of achievers) புத்தகங்களில் இடம்பெறவுள்ளது,” என்று கூறினார்.