பொம்மை பசுவுடன் நடந்த புதுமனை புகுவிழா..! சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ..!
கிரகப்பிரவேசம் என்பது ஒரு புதிய வீட்டிற்கு குடிபுகுவதற்கு முன் செய்யப்படும் ஒரு சடங்கு, இது பொதுவாக பூஜை மற்றும் வழிபாட்டுடன் தொடர்புடையது. இந்தியாவில் இந்துக்கள் வீடுகளில் புதுமனை புகுவிழா நடத்தும் போது பசுவையும், கன்றையும் வீட்டுக்குள் அழைத்து வரும் பாரம்பரியம் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி கோமாதா வருவது, புதுமனையில் லட்சுமி தேவியே எழுந்தருள்வது போன்ற ஒரு தெய்வீகத் தோற்றத்தைத் தருவதாகும்.
இது இந்துக்களின் பாரம்பரிய சடங்கு மட்டுமின்றி ஆன்மிக நம்பிக்கையும் கொண்டதாகும். அதாவது புதுமனை புகுவிழாவின் போது பசுமாட்டை முதலில் வீட்டுக்குள் அழைப்பது, நேர்மறை ஆற்றலையும், அந்த இடத்தைத் தூய்மைப்படுத்தவும், செல்வச் செழிப்பு, நல்ல அதிர்ஷ்டம், மகிழ்ச்சி மற்றும் அனைத்து தெய்வங்களின் ஆசீர்வாதங்களையும் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் பசுவின் பாதங்கள் பட்ட இடம் புனிதமாகும் என்பது நம்பிக்கை.
ஆனால், சென்னை போன்ற பெரு நகரங்களில் பசுவை காண்பதே அரிதாக உள்ளது. கிடைத்தாலும் அவை அப்பார்ட்மெண்ட் விதிப்படி வீட்டிற்குள் அழைத்து செல்ல அனுமதிப்பது இல்லை.
அப்படி புதுமனை புகுவிழாவின் போது ஒரு பசுவை கொண்டு வருவது சாத்தியமில்லாதபோது, மக்கள் சடங்கு பாரம்பரியத்தை மதிக்க புதிய வீட்டின் பெயரில் கோசாலைகளுக்கு (பசு காப்பகங்கள்) தீவனம் வழங்குகிறார்கள் அல்லது நன்கொடைகளை வழங்குகிறார்கள். அல்லது மக்கள் ஒரு பசு மற்றும் கன்றின் சிலை அல்லது படத்தை வைத்து சடங்கு சம்பிரதாயங்களை செய்கிறார்கள். பசு மாடு அழைத்து வரமுடியாக சூழ்நிலையில் இது ஒரு பொதுவான நடைமுறையாகக் கருதப்படுகிறது.
ஆனால் இவற்றை எல்லாம் மிஞ்சும் வகையில், புதுமையை புகுத்துவாத கூறி, பசு பொம்மையை வைத்து ஒரு குடும்பம் புதுமனை புகுவிழா நடத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
ஜெயா நாகேஷ் என்ற பயனர் ‘கிரகப்பிரவேசத்தில் பசு (தொழில்நுட்பம்)’ (Cow in graha prevasam( Technology) என்று பதிவிட்டு, அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்த நிலையில், இந்த வீடியோ வைரலாகி, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், கிட்டத்தட்ட 9,000 லைக்குகளையும், 28,000க்கும் மேற்பட்ட பகிர்வுகளையும் பெற்றுள்ளது.
மேலும் கிரகப்பிரவேச விழாவில் பொம்மை பசுவைப் பயன்படுத்துவது குறித்து இணையவாசிகளிடையே காரசாரமான விவாதம் நடந்த நிலையில், தொழில்நுட்பத்தை ஆதரித்து சிலரும், கலாச்சாரத்திற்கு எதிரானது என்று சிலரும் அவர்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பல பயனர்கள், ‘டிஜிட்டல் இந்தியா’, ‘2.0 ரோபோ’, ‘தொழில்நுட்பம்’ என பலதரப்பட்ட கருத்துக்களை பதிவிட்டுள்ளர்.
அதேசமயம் கிரகப்பிரவேச விழாவில் பொம்மை பசுவைப் பயன்படுத்தியதற்காக ஒரு சில பயனர்கள் குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்தனர்.
‘இந்து மக்கள் கலாச்சாரம்/இந்து மதத்தை கேலி செய்கிறார்கள்’, என்று ஒரு பயனரும், மற்றொரு பயனர் ‘அவர்கள் சடங்கை கேலி செய்வது போல் உணர்கிறேன்’ என்றும் இன்னொருவர், ‘வீடும் பொம்மையாக இருக்க வேண்டும்’ என்றும் பல்வேறு தரப்பட்ட கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவில் இந்துக்கள் உயிரினும் மேலாக கடைபிடிக்கும் சாஸ்திரம் சம்பிரதாயத்தை குழைக்கும் வகையில் இதுபோன்று புதுமை என்ற பெயரில் வரும் தொழில்நுட்பத்தை மக்கள் என்றுமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிச்சயம். புதுமை, தொழில்நுட்பம் என்ற பெயரில் சாஸ்திர சம்பிரதாயங்களையும், பாரம்பரியத்தையும் அழியாமல் பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பு.

