TRAI அதிரடி: ஸ்பேம் கால்களுக்கு முற்றுப்புள்ளி! ஒரே மெசேஜில் பிளாக் செய்வது எப்படி?

TRAI அதிரடி: ஸ்பேம் கால்களுக்கு முற்றுப்புள்ளி! ஒரே மெசேஜில் பிளாக் செய்வது எப்படி?
Airtel spam protection
Airtel spam protection

மணிகண்டன், எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில் பயனுள்ள தகவல்களையும் புதிய சிந்தனைகளையும் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறார்.

Updated on: 

தேவையற்ற கால், விளம்பரங்கள் உங்கள் மொபைல் எண்ணுக்கு வருவதை தவிர்க்கும் DND வசதியை மேலும் கடுமையாக்கியது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI).

செல்போன் பயனர்களை நாள்தோறும் தொந்தரவு செய்து வந்த தேவையற்ற ஸ்பேம் அழைப்புகள் (Spam Calls) மற்றும் விளம்பர மெசேஜ்களை தடுக்க, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) 'தொலைத்தொடர்பு வணிகத் தொடர்புகள் வாடிக்கையாளர் விருப்பத்தேர்வு விதிகள், 2026' என்ற புதிய சட்ட திருத்தத்தை அமல்படுத்தியுள்ளது.

இதுவரை பயனர்கள் புகார் அளித்தால் மட்டுமே ஸ்பேம் எண்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி அந்த பொறுப்பு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் (Airtel, Jio, Vi, BSNL) மீதே சுமத்தப்பட்டுள்ளது. நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளே சந்தேகத்திற்கிடமான எண்களைக் கண்டறியும். 2026 ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 771 கோடி ஸ்பேம் அழைப்புகள் மற்றும் 48 கோடி எஸ்.எம்.எஸ்கள் AI மூலம் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. AI அமைப்பால் ஒரு எண் ஸ்பேம் என அடையாளம் காணப்பட்டால், 2 மணி நேரத்திற்குள் தகவல்கள் பகிரப்பட்டு, அந்த நபரின் KYC விவரங்கள் சரிபார்க்கப்படும். ஒரே நபர் 10 நாட்களுக்குள் 5க்கும் மேற்பட்ட எண்கள் மூலம் ஸ்பேம் அழைப்புகள் செய்தது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் பாயும்.

Spam calls
Spam calls

ஸ்பேமர்களுக்கு காத்திருக்கும் கடும் தண்டனை:

முதல்முறை தவறு: AI மூலம் பிடிபட்டால், அந்த நபருக்குச் சொந்தமான அனைத்து SIM கார்டுகளின் வெளிச்செல்லும் அழைப்புகள் (Outgoing Calls) 15 நாட்களுக்கு உடனடியாகத் தடை செய்யப்படும்.

மீண்டும் தவறு செய்தால்: அவரது அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு, 1 ஆண்டுக்குக் கருப்புப் பட்டியலில் (Blacklist) வைக்கப்படுவர். அந்த ஓராண்டிற்கு எந்த ஒரு நிறுவனமும் அவர்களுக்கு புதிய SIM வழங்க முடியாது.

பிளாக் செய்யும் எளிய வழி:

விளம்பர அழைப்புகளை மட்டும் முற்றிலும் தடுக்க விரும்பும் பயனர்கள், தங்களின் மொபைலில் இருந்து BLOCK PROMO என டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி (SMS) அனுப்ப வேண்டும். இதன் மூலம் ரியல் எஸ்டேட், லோன் போன்ற தொல்லை தரும் அழைப்புகள் தடுக்கப்படும்.

BLOCK PROMO என டைப் செய்து 1909 என்ற எண்ணுக்கு அனுப்பினால், லோன், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட விளம்பரங்கள் தடுக்கப்படும். DND சேவையை ஆக்டிவேட் செய்தாலும், வங்கியில் இருந்து வரும் OTP உள்ளிட்ட சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படாது.

முக்கிய குறிப்பு :

DND சேவையை ஆக்டிவேட் செய்தாலும், வங்கிகளில் இருந்து வரும் OTP, கணக்கு பரிவர்த்தனை தகவல்கள், டெலிவரி அப்டேட்டுகள் மற்றும் அரசு அறிவிப்புகள் தடையின்றி உங்கள் எண்ணிற்கு வந்து சேரும்.

Truecaller போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளால் அரசின் அதிகாரப்பூர்வ எண்களை பிளாக் செய்ய முடியாது. இருப்பினும், உங்களது சொந்த போனில் தேவையில்லாத எண்களை நீங்களே பிளாக் செய்து கொள்ளலாம். தேவையற்ற அழைப்புகளால் நேரம் வீணாவதைத் தவிர்க்க இன்றே 1909-க்கு BLOCK PROMO அனுப்பி நிம்மதியான சேவை பெறுங்கள்!

இதையும் படியுங்கள்:
பெண்களுக்கு அவசர உதவி: 181, 112, காவலன் செயலி எப்படிப் பயன்படுத்துவது?
Airtel spam protection