சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் நேரம், வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களுக்கு பயணிக்க பொதுமக்கள் பெரும்பாலும் ரயில் போக்குவரத்தையே நம்பியுள்ளனர். மேலும் பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்கும் ரயில் பயணம் தான் பிரதானப் போக்குவரத்தாக உள்ளது.
இந்நிலையில் வருகின்ற 2026 ஜனவரி 1-ம் தேதி முதல், எழும்பூரில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் மறு மார்க்கத்தில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஆகையால் ரயில்களின் மாற்றப்பட்ட நேரத்தை பயணிகள் அறிந்து கொள்வது அவசியம்.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் நேர மாற்றம்:
1. சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் காலை 7:45 மணிக்கு பதிலாக காலை 8:00 மணிக்கு புறப்படும்.
2. சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் காலை 10:20 மணிக்கு பதிலாக, காலை 10:40 மணிக்கு புறப்படும்.
3. எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ், மதியம் 1:45 மணிக்கு பதிலாக 30 நிமிடங்கள் முன்கூட்டியே அதாவது 1:15 மணிக்கு புறப்படும்.
4. எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மதியம் 2:45 மணிக்கு பதிலாக 3:05 மணிக்கு புறப்படும்.
5. எழும்பூரில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 7:30 மணிக்கு பதிலாக, இனி 15 நிமிடங்கள் முன்கூட்டியே அதாவது, 7:15 மணிக்கு புறப்படும்.
6. எழும்பூரில் இருந்து இரவு 8:10 மணிக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், இனி 35 நிமிடங்கள் முன்கூட்டியே அதாவது, 7:35 மணிக்கு புறப்படும்.
7. எழும்பூரில் இருந்து இரவு 7:15 மணிக்கு புறப்பட்டு செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், இனி 8:35 மணிக்கு புறப்படும்.
8. எழும்பூரில் இருந்து இரவு 8:40 மணிக்கு புறப்பட்டு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ், இனி 8:50 மணிக்கு புறப்படும்.
எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் வரை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் கேரளாவின் கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் நேரம் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்களின் நேர மாற்றம்:
1. திருச்சியில் இருந்து எழும்பூர் வரை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ், காலை 11:00 மணிக்கு பதிலாக மதியம் 12:10 மணிக்கு புறப்படும்.
2. ராமேஸ்வரத்தில் இருந்து எழும்பூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ், மாலை 5:50 மணிக்கு பதிலாக மாலை 6:00 மணிக்கு புறப்படும்.
3. செங்கோட்டையில் இருந்து எழும்பூர் வரை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், மாலை 6:45 மணிக்கு பதிலாக 6:50 மணிக்கு புறப்படும்.
4. திருநெல்வேலியில் இருந்து எழும்பூர் வரை செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ், இரவு 8:40 மணிக்கு பதிலாக 8:50 மணிக்கு புறப்படும்.
5. தூத்துக்குடியில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 8:40 மணிக்கு பதிலாக 9:05 மணிக்கு புறப்படும்.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை எழும்பூருக்கு செல்லும் வைகை, குருவாயூர், நெல்லை மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களின் நேரம் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.