

ரயில் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்த இந்தியன் ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தட்கல் டிக்கெட் முன்பதிவில் டோக்கன் வசதி மற்றும் மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளம் என பயணிகளுக்கு புதுப்புது வசதிகள் வந்து விட்டன.
தட்கல் மற்றும் முன்பதிவு டிக்கெட்டுகளில் ஏஜெண்ட் முறையைத் தவிர்க்கவும், உண்மையான பயணிக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யவும் ரயில்வே நிர்வாகம் விதிகளை கடுமையாக்கியது. இருப்பினும் கூட ஒருவர் முன்பதிவு செய்த டிக்கெட்டில், வேறொருவர் பயணம் செய்வது சட்டப்படி குற்றம் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொலைதூரப் பயணங்களுக்கு பொதுமக்கள் பலரும் ரயில் பயணத்தையே விரும்புவர். குறைவான டிக்கெட் விலை, சவுகரியமான பயணம் மற்றும் நவீன வசதிகள் என ரயில்வே துறையின் முன்னேற்றம் தான் இதற்கு முக்கிய காரணம். இருப்பினும் ஒரு சில பயணிகள் பொது வகுப்பு டிக்கெட்டை எடுத்துவிட்டு, முன்பதிவு வகுப்புகளில் ஏறி விடுகின்றனர்.
இதனால் முன்பதிவு செய்த பயணிகளுக்கு அசவுரியமான சூழல் ஏற்படுகிறது. இதுகுறித்த புகார்கள் ரயில்வே துறையிடம் அளிக்கப்பட்ட நிலையில், டிடிஆர் மற்றும் ரயில்வே போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க முன்பதிவு செய்தது ஒருவர், பயணம் செய்வது வேறொருவர் என புதிய பிரச்சினை எழுந்துள்ளது. இதனைக் கண்டறிந்துள்ள தெற்கு ரயில்வே கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தெற்கு ரயில்வே விடுத்த எச்சரிக்கையில், “முன்பதிவு டிக்கெட்டில் பெயர் உள்ள நபர் மட்டுமே ரயிலில் பயணிக்க வேண்டும். முன்பதிவு டிக்கெட்டுகளை விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இதையும் மீறி முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் பெயர் இல்லாத நபர் பயணித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களை பயணிகள் யாரும் செய்யக் கூடாது. ரயில் பயணங்களை முன்னரே திட்டமிட்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், வேறொரு நபரிடமிருந்து டிக்கெட்டுகளை வாங்க வேண்டிய சூழல் ஏற்படாது. அதோடு டிக்கெட்டுகளை விற்பவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதில் பயணிகள் எதிர்கொண்ட சிரமங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது. குறிப்பாக கேட்ப்சா குறியீடு முறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.
புதிய ஐஆர்சிடிசி இணையதளத்தின் அறிமுகத்திற்குப் பிறகு, தற்போது வரை முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் உயர்ந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
5 நிமிடங்களுக்குள் டிக்கெட் முன்பதிவு செய்யும் நபர்களின் எண்ணிக்கை 3% அதிகரித்துள்ளதாகவும், 30 நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை 2% அதிகரித்து இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன
ரயில்வே டிக்கெட் முன்பதிவில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்க வேண்டும் என்பதில் ரயில்வே நிர்வாகம் தீர்க்கமாக உள்ளது. மேலும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்கப்படுவதைத் தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தெற்கு ரயில்வே.
இதற்குப் பிறகும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்பனையாவது கண்டுபிடிககப்பட்டால், ரயில்வே சட்டத்தின் படி கடுமையான தண்டனை விதிக்கப்படும்.