
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (LIC) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் ஒரு பகுதியாக LIC வீட்டு நிதி நிறுவனம் (LIC Housing Finance) இயங்குகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு அவ்வப்போது தொழிற்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இளைஞர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. தற்போது 192 பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது LIC வீட்டு நிதி நிறுவனம். இந்தத் தொழிற்பயிற்சியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இதற்கு முன்பு வேறு எந்த தொழிற்பயிற்சியையும் முடித்திருக்கக் கூடாது. அதோடு தற்போது பயிற்சியில் இருப்பவர்களும் விண்ணப்பிக்கக் கூடாது.
கல்லூரி படிப்பை முடித்த இளைஞர்கள் திறன் மேம்பாடுகளை வளர்த்துக் கொள்ளவும், தொழில் அனுபவம் குறித்து அறிந்து கொள்ளவும் LIC வீட்டு நிதி நிறுவனம் தொழிற்பயிற்சியை அளித்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 27 காலியிடங்கள் உள்ளன. இதில் அதிகபட்சமாக சென்னைக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கோவையில் 6 இடங்கள், திருப்பூர் மற்றும் ஓசூரில் தலா 2 இடங்கள், காஞ்சிபுரம், காரைக்குடி, திருநெல்வேலி, மதுரை, கரூர், திருவள்ளூர் மற்றும் திருச்சியில் தலா 1 இடம் என மொத்தம் 27 இடங்கள் உள்ளன.
தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரி, தெலுங்கானா, டெல்லி, ஹிரியானா, ஆந்திர பிரதேசம், கேரளா, சண்டிகர், பிகார், அசாம், குஜராத், ஜம்மு காஷ்மீர், மத்தியப்பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, பஞ்சாய், சிக்கிம், ராஜஸ்தான், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தொழிற்பயிற்சி நடத்தப்பட இருக்கிறது.
வயது வரம்பு: 2025 செப்டம்பர் 01 ஆம் தேதியில் படி 20 முதல் 25 வயது வரையுள்ள நபர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
கல்வித்தகுதி: 2021 செப்டம்பர் 01 ஆம் தேதிக்கு முன்னரே பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
முதலில் https://nats.education.gov.in/ என்ற இணையதளத்தில் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு LICHFL என்பதைக் கிளிக் செய்து Apprenticeship பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://www.lichousing.com/careers என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி: செப்டம்பர் 22
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவுக்கு ரூ.944, எஸ்பி/எஸ்டி பிரிவுக்கு ரூ.708, மாற்றுத்திறனாளிகள் ரூ.472 செலுத்த வேண்டும்.
தேர்வு முறை: நிதி, கணிணி, முதலீடு, காப்பீடு, நுண்ணறிவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடைபெறும்.
தேர்வு நடைபெறும் நாள்: 01-10-2025
உதவித்தொகை:
அனைத்து சரிபார்ப்புகளும் முடிந்து நவம்பர் 1 ஆம் தேதி பயிற்சி தொடங்கப்படும். தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு 12 மாதம் பயிற்சியுடன், மாதந்தோறும் ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்படும்.