அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக நடப்பாண்டில் டொனால்ட் ட்ரமப் பதவியேற்றது முதல், பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவ்வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்திய பொருள்களுக்கு 25% முதல் 50% வரையிலான வரியை விதித்தார். இதனால் இந்திய தொழில்துறை மிகவும் பாதிக்கப்பட்டது. இருப்பினும் இதனை சமாளிக்க மத்திய அரசு ஜிஎஸ்டி வரிக் குறைப்பைக் கொண்டு வந்தது.
இந்நிலையில் மீண்டும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி ஆகும் அரிசிக்கு வரி விதிக்க, அதிபர் ட்ரம்ப் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமெரிக்க நாட்டு மக்களின் நலனை மட்டுமே முதன்மையாக கருதி பல்வேறு நாடுகளுக்கு ட்ரம்ப் உச்சபட்ச வரியை நிர்ணயித்து வருகிறார். இந்த வரி விதிப்பு உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் H1-B விசா நடைமுறையில் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி, வெளிநாட்டினருக்கு அதிர்ச்சி கொடுத்தார் அதிபர் ட்ரம்ப். இந்நிலையில் இவர் இந்திய அரிசி மற்றும் கனடா நாட்டு உரங்களுக்கு இறக்குமதி வரியை விதிக்க முடிவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் கடுமையான வரி விதிப்பால் அந்நாட்டைச் சார்ந்து வணிகம் செய்து வரும் இந்தியா மற்றும் கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. வரி விதிப்புக்குப் பிறகு இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பொருளாதாரப் பேச்சு வார்த்தைகள் பெரிதாக முன்னேற்றம் அடையாத நிலையிலேயே உள்ளன.
ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணையை இந்தியா வாங்கி வருவதால், அதனை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்திய பொருள்களின் மீது அமெரிக்கா உச்சபட்ச வரியை நிர்ணயித்தது. இந்நிலையில் தற்போது இந்திய அரசிக்கும் இறக்குமதி வரியை விதிக்க உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து அதிகளவிலான அரிசி அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் அமெரிக்க விவசாயிகள் பாதிக்கப்படுவதாக ட்ரம்ப் கூறுகிறார். இதன் காரணமாகவே இந்திய அரசிக்கான இறக்குமதி வரியை உயர்த்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விவசாயிகளுக்கு 12 பில்லியன் நிதியுதவியை வழங்குவதற்கான கூட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இந்தியா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து மானிய விலையில் அமெரிக்கா அரிசியை இறக்குமதி செய்வதன் மூலம் அமெரிக்க சந்தையில் பாதிப்பு ஏற்படுகிறது. இது உள்நாட்டு அரிசி விலையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர். ஆகையால் இந்த விஷயத்தில் கடுமையான நடவடிக்கையை அமெரிக்க அரசு எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறுகையில், “வெளிநாட்டு அரிசி இறக்குமதியால், உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவதை அமெரிக்க அரசு வேடிக்கை பார்க்காது. இந்த விவகாரம் தொடர்பாக வெளிநாட்டு அரிசிகளுக்கு இறக்குமதி வரியை உயர்த்துவது தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும். அமெரிக்காவிற்கு பெரும்பாலான விவசாய உரங்கள் கனடா நாட்டில் இருந்தே வருகின்றன. தேவை ஏற்படின் கனடா நாட்டு உரங்களுக்கும் வரி விதிப்பை உயர்த்துவேன். விவசாயிகள் என்னிடம் வலியுறுத்தியதை நிச்சயமாக நான் செய்வேன். அதனை என்னால் செய்ய முடியும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.