

உலக அளவிலான வர்த்தக சந்தையில், அமெரிக்காவின் முடிவுகள் தான் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த ஆண்டு இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்தது. முதலில் 25 சதவீத வரியை விதித்த அமெரிக்கா, பிறகு வரிவிதிப்பை அதிகப்படுத்தினால் இந்தியா தனது நிலையில் இருந்து மாறும் என்று எதிர்பார்த்தது.
ஆனால் அமெரிக்காவின் வரிவிதிப்பு மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா, தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. இந்நிலையில், தான் மகிழ்ச்சியாக இல்லை எனவும், இந்தியா மீதான வரி விதிப்பை என்னால் உயர்த்த முடியும் எனவும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியா மீது 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்ததால், இந்தியாவைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், அமெரிக்காவின் வரிவிதிப்பு காரணமாக இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா விதித்த வரி விதிப்பிலிருந்து உற்பத்தியாளர்களை பாதுகாக்க, இந்தியா துணை நிற்கும் என மத்திய அரசு தெரிவித்தது. இதன்படி ஜிஎஸ்டி வரியைக் குறைத்து, வணிகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு சற்று ஆறுதலை அளித்தது மத்திய அரசு.
அமெரிக்காவின் எந்தவித மிரட்டலுக்கும் பணியாத இந்தியா, தனது எரிசக்தி தேவைகளுக்காக ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. குறிப்பாக, கடந்த 2025 நவம்பர் மாதத்தில் மட்டும் 6 மாதங்களில் இல்லாத அளவாக 7.7 மில்லியன் டன் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அதே வேளையில், 20% எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) மற்றும் மின்சார வாகனங்கள் (EV) பயன்பாட்டின் மூலம் இறக்குமதியைக் குறைக்கும் முயற்சியிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி விதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய, மத்திய அரசு சார்பாக நாடாளுமன்ற நிலைக்குழு தமிழகத்திற்கு வரவுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில், நாடாளுமன்ற நிலைக்குழு தமிழகம் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் மகிழ்ச்சியாக இல்லை எனவும், தன்னை மகிழ்விக்க வேண்டியது இந்தியாவிற்கு முக்கியம் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. இதனால் நான் மகிழ்ச்சியாக இல்லை. இந்தியா என்னை மகிழ்விக்க வேண்டியது முக்கியம். ரஷ்யாவிடம் இந்தியா தொடர்ந்து வர்த்தக உறவில் ஈடுபட்டு வந்தால், நான் கூடுதல் வரியை விதிப்பேன். ஏற்கனவே இந்தியா மீது 50 சதவீத வரி விதிப்பு முறை தொடர்கிறது. இந்நிலையில் என்னால் மேலும் இந்த வரி விதிப்பை உயர்த்த முடியும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார் டிரம்ப்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள இந்த எச்சரிக்கையை, இந்தியா நிச்சயம் சமாளித்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்தியா மீது அமெரிக்கா மீண்டும் கூடுதல் வரியை விதித்து விட்டால், அது இந்திய வர்த்தகர்களை அதிகளவில் பாதிக்கும் என்றே கருதப்படுகிறது.
அமெரிக்கா ஏற்கனவே 50% வரி விதித்துள்ள நிலையில், அதனை மேலும் உயர்த்தினால் கீழே உள்ள துறைகள் பெரும் சரிவைச் சந்திக்கக்கூடும்:
ஜவுளித் துறை (Textiles): திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் ஆயத்த ஆடைகள் மற்றும் துணி வகைகள் விலை உயர்ந்து, சந்தையில் போட்டித்தன்மையை இழக்கும்.
தகவல் தொழில்நுட்பம் (IT Services): வரி விதிப்பு நேரடியாகப் பாதிக்காவிட்டாலும், வர்த்தக விரிசல் காரணமாக விசா கட்டுப்பாடுகள் மற்றும் மென்பொருள் ஒப்பந்தங்கள் குறைய வாய்ப்புள்ளது.
மருந்துப் பொருட்கள் (Pharmaceuticals): அமெரிக்காவிற்கு அதிகளவில் மருந்துகளை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. கூடுதல் வரி மருந்து விலைகளை உயர்த்தும்.
ஆபரணங்கள் மற்றும் வைரம்: அமெரிக்கச் சந்தையை அதிகம் நம்பியுள்ள இந்திய வைர மெருகூட்டும் தொழில் பெரும் பின்னடைவைச் சந்திக்கும்.