

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஒரு வருட காலமாக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தார். இந்த ஆண்டு நோபல் கமிட்டியின் விருது பெறுபவர்கள் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. இந்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற 2026 உலகக் கோப்பை டிராவில் டொனால்ட் டிரம்பிற்கு , ஃபிஃபாவின் முதல் அமைதி பரிசு வழங்கப்பட்டது. வரலாற்றில் முதல்முறையாக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா விளையாட்டு சாராத ஒருவருக்கு விருது வழங்கியுள்ளது. இதற்காக புதியதாக அமைதிக்கான ஃபிஃபா விருதை உருவாக்கியுள்ளது.
2026 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் உலகக் கோப்பைத் தொடரை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. போட்டியின் ஆரம்ப நிகழ்விலேயே , யாரும் எதிர்பார்க்காத வண்ணம் டிரம்பிற்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவரும் , டிரம்பின் நெருங்கிய நண்பருமான ஜியானி இன்ஃபான்டினோ இந்த விருதை டொனால்ட் டிரம்பிற்கு வழங்கி கெளரவித்தார்.
பரிசை வழங்கும் போது, ஜியானி டிரம்பிடம் இது "நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லக்கூடிய ஒரு அழகான பதக்கம்" என்று கூறினார். டிரம்ப் உடனடியாக பதக்கத்தை தனது கழுத்தில் அணிந்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் அதை அனைவருக்கும் காட்டினார். மேலும் டிரம்ப் பெயர் பொறிக்கப்பட்டு, உலகை உயர்த்திப் பிடிக்கும் கைகளை கொண்ட ஒரு தங்கக் கோப்பையையும் டிரம்பிற்கு வழங்கினார். சர்வதேச அரங்கில் பல முறை டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும், என்று பலமுறை ஜியானி குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
உலகளவில் கால்பந்து போட்டிக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர் , அதனால் உலகின் மிக உயர்ந்த விளையாட்டுத் துறை அமைப்பாக ஃபிஃபா உள்ளது. அந்த அமைப்பு ஒரு நாட்டின் அரசியல் தலைவருக்கு இதுபோன்று அமைதி விருது வழங்குவது இதுவே முதல் முறையாகும். உலக அளவில் அமைதியை நிலைநாட்டவும், மக்களை ஒன்றிணைக்கவும் டிரம்ப் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக ஃபிஃபா தலைவர் ஜியானி கூறினார். மேலும் காசா மற்றும் காங்கோ பிராந்தியப் பகுதிகளில் போர் நிறுத்தத்தை கொண்டுவர டிரம்ப் மேற்கொண்ட இராஜதந்திர முயற்சிகளையும் அவர் பாராட்டினார் .
அமைதிப் பதக்கம் மற்றும் தங்கக் கோப்பையை பெற்றுக் கொண்ட டிரம்ப் "என் வாழ்வில் நான் பெற்ற மிகச்சிறந்த கௌரவங்களில் இதுவும் ஒன்று , விருதுகளை விட கோடிக்கணக்கான உயிர்களை நாம் காப்பாற்றியுள்ளோம் என்பதே முக்கியம். உலகம் இப்போது மிகவும் பாதுகாப்பான இடமாக உள்ளது" என்று கூறினார். மேலும், டிரம்ப் தனக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் தனது மனைவி மெலனியா மற்றும் தன் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தார். ஃபிஃபா உலகக் கோப்பையை நடத்தும் மற்ற நாடுகளைச் சேர்ந்த கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் மெக்சிகன் ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் ஆகியோரையும் பாராட்டி பேசினார். விருது வாங்கிய டிரம்ப் அரங்கத்தில் இசைக்கப்பட்ட பாடலுக்கு நடனமாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.