

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் தொடங்கிய போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்த போர் காரணமாக உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து வெள்ளை மாளிகையில் உள்ள Situation Room-ல் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் எந்த ஒரு முடிவையும் அறிவிக்காமல் டிரம்ப் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 60 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில் போர் நிறுத்தத்தை நீட்டிக்கவும், ஹார்மோஸ் நீரிணையை திறக்கவும் வெள்ளை மாளிகையில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகளுடன் அதிபர் டிரம்ப் ஆலோசனைக் கூட்டத்தை மேற்கொண்டார்.
அணு ஆயுத தயாரிப்பை ஈரான் கைவிட வேண்டும் எனவும், ஹார்மூஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதற்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது, கடல்சார் கன்னி வெடிகளை ஈரான் உடனடியாக அகற்ற வேண்டும் போன்ற நிபந்தனைகளை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இருப்பினும் இதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்திருக்கும் நிலையில், இந்த போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும், கடந்த சில தினங்களில் அமெரிக்கா, ஈரான் மீது 2 முறை பாதுகாப்பு காரணங்களுக்காக தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரானும் தாக்கியது.
அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், நாங்கள் எங்கள் நாட்டின் நலன் மற்றும் உரிமைகளின் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்போம் என ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார். இருப்பினும் போடரை முடிவுக்கு கொண்டு வருவதிலையே எங்களது முழு கவனமும் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பொது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் காத்திருக்கும் சூழலில், இரு நாடுகளும் எதிரெதிராகவே செயல்படுகின்றன. இந்நிலையில் போர் குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஆலோசித்த கூட்டத்தில், எந்த ஒரு முடிவையும் அறிவிக்காமல் அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதியாக சென்றுள்ளார். டிரம்ப் ஏற்பாடு செய்த ஆலோசனை கூட்டத்தில், அவரே முடிவை அறிவிக்காமல் சென்றிருப்பது, பாதுகாப்பு அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இதனால் போர் மீண்டும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் போர் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நிலைப்பாடு என்ன என்பதும் இனி தான் தெரியவரும்.