பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாட்டு தீவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியாவில் தொடர்ச்சியாக சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தவையாக இல்லை. இந்தியாவில் எல் நினோ நிகழ்வால் அதிகம் குளிர் இருக்கும் என்றும் மழை பெய்யும் என்றும் சொல்லப்படுகிறது. மழைக்காலம் இன்னும் சில நாட்களில் முடிவடைந்துவிடும். ஆனால், அடுத்த மூன்று மாதங்கள் வரை கடுமையான குளிர் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இப்போது வட இந்தியாவில் சில மாநிலங்களில் குளிர் அலை வீசி வருவதே இதற்கான சாட்சி.
இந்தியாவுக்கு மட்டும் இந்த நிலைமை அல்ல. உலகம் முழுவதும் பல காலநிலை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அந்தவகையில் பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவுக் கூட்டங்கள் இடையே நியூசிலாந்திற்கு வடக்கே அமைந்துள்ள சிறிய தீவு நாடு வனுவாட்டு (Vanuatu). வனுவாட்டு தீவின் விலா துறைமுகத்திலிருந்து 31 கிமீ தள்ளி கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அருகே உள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்து வரை உணரப்பட்டுள்ளது. அந்த தீவுகளிலும் நியூசிலாந்திலும் தான் தற்போது சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காலை 7.17 அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அதைத் தொடர்ந்து அதே பகுதியில் 7.23 மணியளவில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கமும், பிறகு விலா துறைமுகத்திலிருந்து 72 கி,மீ தொலைவில் 4.7 ரிக்டர் அளவிலும் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதால் மேலும் பரபரப்பு எழுந்துள்ளது.
இதனால் தீவுகளிலும் நியூசிலாந்திலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மக்களுக்கு விழிப்புணர்வுகளும் நடைபெற்று வருவதோடு, மிகவும் அபாயம் உள்ள இடங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.