பக்தர்களே அலர்ட்: திருப்பதியில் நாளை 'கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்': முக்கிய தரிசனங்கள் ரத்து...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (மார்ச் 17-ம்தேதி) முக்கிய தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
tirupati Complete Guide for Darshan
Tirupati
Published on

ஆந்திர மாநிலத்தில் திருமலை மலை மீது அமைந்துள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் கலியுக வைகுண்டம் என்று போற்றப்படும் உலகப் பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலமாகும். குறிப்பாக இந்தியாவில் பணக்கார கோவில் என்ற பெருமையும் இந்த கோவிலுக்கு உண்டு. கட்டுக்கடங்காத கூட்டங்களோடு, ஏராளமான சர்ச்சைகள் சூழ்ந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்றுவரை எள்ளளவும் குறைந்தபாடில்லை.

ஏழு மலைகளின் உச்சியில் வீற்றிருக்கும் பாலாஜியை தரிசனம் செய்ய தென்மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வடமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். விசேஷ நாட்களில் பக்தர்கள் 24 மணிநேரம் கூட காத்திருந்து பெருமாளை தரிசிக்கும் நிலையில் உள்ளனர். இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் 20 மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் திருப்பதி கோவிலில் நாளை (மார்ச் 17ம் தேதி) முக்கிய தரிசனங்கள் சில ரத்து செய்யப் படுவதாகவும், அன்றைய தினம் சுமார் 6 மணி நேரம் வரை கோவில் நடை அடைக்கப்பட்டிருக்கும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சார்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
திருப்பதி பக்தர்களுக்கு குட் நியூஸ்..! இனி வாட்ஸ்அப் மூலமே தரிசன டிக்கெட் பெறலாம்..!
tirupati Complete Guide for Darshan

எனவே அன்றைய தினம் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபாடு செய்ய திட்டமிட்டிருப்பவர்கள் இந்த முக்கிய அறிவிப்பு மற்றும் மாற்றங்களை தெரிந்து கொண்டு திருப்பதி பயணத்தை திட்டமிட்டு கொண்டால் தேவையற்ற சிரமங்களை தவிர்க்கலாம் என்று கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு மார்ச் 19ம் தேதி (வியாழக்கிழமை) யுகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு) கொண்டாடப் படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. யுகாதியை முன்னிட்டு திருப்பதி கோவிலில் யுகாதி அஸ்தனம் உற்சவம் நடைபெறுவதையொட்டி நாளை (மார்ச் 17ம் தேதி) செவ்வாய்கிழமை ‘கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்’ என்னும் ‘தூய்மைப் பணி’ நடைபெற உள்ளது.

அதாவது, திருமலையில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களுக்கு முன்பாக கோவில் முழுவதும் சுத்திகரிப்பு செய்யப்படும் பாரம்பரிய நிகழ்வாக ‘கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்’ கருதப்படுகிறது. இந்த நிகழ்வின் போது, கோவிலின் மண்டபங்கள், சுவர்கள் மற்றும் தரைப்பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களும் சிறப்பு மூலிகை கலவைகள் கொண்டு சுத்தம் செய்யப்படுவது இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாகும்.

எனவே 17ம்தேதி தூய்மை பணி நடப்பதால் அன்றைய தினம் பக்தர்களுக்கான சில சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

இதனை முன்னிட்டு மார்ச் 16, 17,18, 19 ஆகிய நான்கு நாட்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப் படுவதாகவும், மார்ச் 17ம் தேதி மட்டும் அஷ்டதல பாத பத்மாரதனை சேனை ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 16-ம்தேதியில் இருந்தே விஐபி பிரேக் தரிசனத்திற்கான சிபாரிசு கடிதங்களும் ஏற்கப்படாது என்றும், ஆனால் முக்கிய அரசுமுறை பிரதிநிதிகள் தவிர மற்றவர்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதேபோல் மார்ச் 16-ம்தேதி முதல் தரிசன நேர முறைப்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன, பக்தர்கள் ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் திருப்பதி பயணத்தைத் திட்டமிடுமாறு கோவில் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பக்தர்களே நோட் பண்ணிக்கோங்க: திருப்பதி ரெயில் சேவையில் அதிரடி மாற்றம்..!
tirupati Complete Guide for Darshan

தற்போது பெரும்பாலான மாநிலங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வு நடப்பதாலும், விடுமுறை நாட்கள் ஏதும் இல்லாததாலும் திருப்பதியில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் வெகுவாக குறைந்தே காணப்படுகிறது. அதேபோல் வெளியூர்களில் இருந்து ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்தே காணப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com