

திருப்பதியில் மூத்த குடிமக்களுக்கு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் திருப்பதி ஏழுமலையானை 30 முதல் 45 நிமிடங்களில் எளிதாக தரிசிக்க TTD (திருப்பதி தேவஸ்தானம்) சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆந்திர மாநிலத்தில் திருமலை மலை மீது அமைந்துள்ள உலக பிரசிதி பெற்ற கோவில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவில் கலியுக வைகுண்டம் என்று போற்றப்படும் உலகப் பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலமாகும். குறிப்பாக இந்தியாவில் பணக்கார கோவில் என்ற பெருமையும் இந்த கோவிலுக்கு உண்டு. கட்டுக்கடங்காத கூட்டங்களோடு, ஏராளமான சர்ச்சைகள் சூழ்ந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை இன்றுவரை எள்ளளவும் குறைந்தபாடில்லை.
ஏழு மலைகளின் உச்சியில் வீற்றிருக்கும் திருப்பதி ஏழுமலையானை தினமும் சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
அதுவும் பண்டிகை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் வந்துவிட்டால் ஏழுமலையானை தரிசிக்கவே கிட்டத்தட்ட 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக, ரூ.300 சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம், மூத்த குடிமக்களுக்கான தரிசனத்தை திருப்பதி தேவஸ்தானம் (TTD) மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் 30 நிமிடங்களில் ஏழுமலையானை தரிசிக்க, இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டத்தை தொடங்கிவைத்துள்ளார். தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அவர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
தரிசன நேரத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே (காலை 8 மணி அல்லது மதியம் 1 மணிக்குள்) குறிப்பிட்ட கவுண்டரில் ஆஜராக வேண்டும்.
கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் 65 வயதை அடைந்திருந்தால், துணை நபர் ஒருவரையும் உடன் அனுமதிக்கப்படுவர். இந்த திட்டத்தின் மூலம், இனிமேல் மூத்த குடிமக்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது.
இனி 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் எவ்வாறு இலவச தரிசனத்திற்கு செல்வது என்பது குறித்து பார்க்கலாம்...
அதாவது, 65 வயதிற்கு மேலான பக்தர்கள் புகைப்பட அடையாள அட்டை மற்றும் வயதுச் சான்றை கவுண்டர் எஸ்-1-ல் காட்ட வேண்டும். பின்னர், கோவிலின் வலது சுவரையொட்டி, பாலத்தின் கீழுள்ள மண்டபத்தின் வழியாக செல்லாம்.
இந்த வழியில் படிக்கட்டுகள் எதுவும் கிடையாது என்பதால், வயதான பக்தர்கள் எளிதாக நடந்து செல்ல முடியும்.
தரிசன வரிசைக்கு சென்றவுடன் 30 நிமிடங்களில் தரிசனத்தை முடித்து வெளியே வரலாம். இதனால் வயதான பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் தவிர்க்கப்படுகிறது.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயனடையும் இத்திட்டத்தில், தரிசனத்திற்கு பிறகு முதியோர் அனைவருக்கும் சாம்பார் சாதம், தயிர் சாதம், பால் உள்ளிட்ட பிரசாதமும் இலவசமாக வழங்கப்படுகிறது.
மேலும், பேட்டரி கார்கள் மூலம் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து கவுண்டருக்கும், பிறகு அங்கிருந்து வெளியேறும் வாயிலுக்கும் அழைத்து செல்ல வசதி உள்ளது. திருப்பதி தேஸ்தானத்தின் இந்த அறிவிப்பால் மூத்த குடிமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.