
ஆந்திர மாநிலத்தில் உள்ளது மிகவும் பணக்கார கோவிலான திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். தினமும் அதிகளவு பக்தர்கள் கூடும் கோவில்களில் திருப்பதி கோவில் முதலிடத்தில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் அதிகளவிலான மக்கள் வருவதால் அவர்கள் விட்டுசெல்லும் குப்பைகள் டன் கணக்கான சேர்ந்து விடும். மேலும் இவ்வாறு சேரும் குப்பைகளை அகற்ற நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டுக்கொண்டே இருப்பார்கள்.
அப்படி இருந்தும் குப்பைகள் அதிகளவு சேருவதால், திருப்பதியில் தூய்மையை கடைபிடிக்கவும், பக்தர்களின் சிரமத்தை தவிர்க்கும் வகையிலும், திருமலை, திருப்பதிக்கு வரும் பக்தர்கள் விட்டுசெல்லும் குப்பைகளை சுத்தம் செய்வதற்காக திருப்பதி தேவஸ்தானம் AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
திருப்பதி கோவிலில் உள்ள அந்த மெஷினை அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்து குப்பைகளை பெற்றுக்கொண்டு பணம் தரும் அந்த மெஷினை எப்படி பயன்படுத்துவது என்பதை ஆர்வத்துடன் கேட்டறிந்தார். இந்த வகையில், இந்த மெஷினில் உங்களிடம் உள்ள பாட்டில், கப், பிளாஸ்டிக் போன்ற குப்பைகளை போடுவதற்கு முன் அந்த பொருளை மெஷினில் ஸ்கேன் செய்ய வேண்டும்.
பின்னர் அதில் பொருட்களை போடும் பகுதியில் போட்டு விட்டு உங்கள் போனில் QR code ஐ ஸ்கேன் செய்தால் போதும், நீங்கள் போட்ட பொருளுக்கு ஏற்ற மாதிரியான பணம் உங்கள் அக்கவுண்டுக்கு நேரடியாக வந்துவிடும். இதில் பொருட்களை ஒவ்வொன்றாக ஸ்கேன் செய்த பின்னர் ஒவ்வொரு பொருளாக போட வேண்டும். கடையில் நீங்கள் போட்ட அனைத்து பொருட்களுக்கும் சேர்த்து அதற்கான பணம் உங்கள் அக்கவுண்டுக்கு வந்துசேரும்.
ஒரு மார்டன் இரும்பு கடை போல் செயல்படும் இந்த மெஷின் செயல்படும் முறையை மிகவும் ஆச்சரியத்துடன் கேட்றிந்தார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.
இதுபோன்ற மெஷின்கள் மக்கள் அதிகமாக கூடக்கூடிய ஆன்மிக ஸ்தலங்கள், பொது இடங்களில் இருந்தால் அது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதுடன், அதிகளவும் குப்பை சேருவது தவிர்க்கப்படுவதுடன், அந்த இடத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அத்துடன், ஆந்திரப் பிரதேசத்தை வரும் ஜனவரி 1-ம் தேதிக்குள் 'பூஜ்ஜிய குப்பை மாநிலமாக' மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
பொதுமக்களிடமிருந்து பண்டமாற்று முறையில் திடக்கழிவுகளை சேகரிக்க 100 'தூய்மை ரதம்' வாகனங்களை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், ஒவ்வொரு அலுவலகத்திலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு சுற்றுப்புறத்திலும் மக்கள் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்ட அவர், ஆந்திரப் பிரதேசத்தை தூய்மையாகவும், பசுமையாகவும், ஆரோக்கியமாகவும் மாற்ற மக்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். ஆரோக்கியமான சமூகத்திற்கு சுத்தமான சுற்றுப்புறங்கள் அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சில தினங்களுக்கு முன், ஆந்திராவில் முந்தைய அரசு தூய்மை இந்தியா நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், குப்பை வரி விதித்து குப்பை அகற்றும் பணியை புறக்கணித்ததால், கோவில் நகரமான திருமலை உட்பட மாநிலம் முழுவதும் 85 லட்சம் மெட்ரிக் டன் குப்பை குவிந்ததாக முதலமைச்சர் சந்திரபாவு நாயுடு விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.