தவெக அமைச்சர் மரிய வில்சன் ஜூலை 10-ல் நேரில் ஆஜராக புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவு..!

அமைச்சர் மரிய வில்சன்
அமைச்சர் மரிய வில்சன்Source:hindutamil
Updated on

2022-ல் புதுச்சேரியில் வீடு புகுந்து சகோதரர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக தொடரப்பட்ட கொலை முயற்சி வழக்கில் நிதி அமைச்சர் மரிய வில்சன் சனிக்கிழமை ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆனால் அமைச்சர் மரியவில்சன் இன்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் அவரது வழக்கறிஞர் ஆஜரானார்.

தற்போதைய நிதி அமைச்சர் மரிய வில்சனுக்கும் அவருடைய தம்பிக்கும் இடையில் சொத்துப் பரச்சினை இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதியன்று புதுச்சேரி லாஸ்பேட்டை எழில் நகரில் உள்ள மரிய வில்சனின் சகோதரர் மரிய குலோத் வீட்டில் தற்போதைய நிதி அமைச்சர் மரிய வில்சன் நுழைந்து அவரது சகோதரர் மற்றும் அவருடைய மனைவி கெரோலைன் கிளேட்டையும் கட்டையால் தாக்கினார் என்று லாஸ்பேட் போலீஸ் நிலையத்தில் புகார் பதிவானது.அமைச்சரின் சகோதரர் மற்றும் அவருடைய மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவானது.

அமைச்சர் மரிய வில்சன்
அமைச்சர் மரிய வில்சன்

மரிய வில்சன் அவரது சகோதரர் மற்றும் சகோதரியின் மனைவியை தாக்கியதுடன் மட்டுமல்லாமல், தாங்கள் நடத்தி வரும் செயின்ட் ஆண்டனி பள்ளி நிர்வாகத்தில் தலையிட்டால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர். படுகாயம் அடைந்த மரிய குலோத் மற்றும் அவருடைய மனைவி கெரோலின் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது, தாக்குதல் நடத்தியது, சொத்திற்கு சேதம் விளைவித்து, ஆபத்தான ஆயுதத்தால் காயம் ஏற்படுத்தியது, கொலை மிரட்டல் மற்றும் கூட்டு சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மரிய வில்சன் மற்றும் அவருடைய தந்தை நெஸ்தோர் இருவரையும் போலீசார் கைது செய்து, ஜாமீனில் விடுவித்தனர்.

மரிய வில்சன் தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியைத் தாக்குவது போன்ற வீடியோக்கள் தேர்தல் சமயத்தில் சமூக வலைதளங்களில் பரவியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தவெக சார்பில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்ட மரிய வில்சன் வெற்றி பெற்று அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். தொடர்ச்சியாக நீதிமன்ற வாய்தாவுக்கு அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகாததை அடுத்து அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கலானது. இவ்வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பலமுறை வாய்தா வழங்கப்பட்ட போதிலும், மரிய வில்சன் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கடந்த மாத வாய்தாவின் பொழுதும் மரிய வில்சன் ஆஜராகவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதை நேரில் பெற்றுக் கொள்ள மரிய வில்சன் நீதிமன்றத்தில் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று மாஜிஸ்ட்ரேட் சேரலாதன் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் மரிய வில்சன் இன்று புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று ஆஜராகவில்லை. தமிழக பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் இருப்பதால் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை என்று அவருடைய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.இதனை அடுத்து ஜூலை 10ஆம் தேதி அமைச்சர் மரிய வில்சன் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
தசரா விடுமுறைக்கு வெளியாகும் ஜெயிலர் - 2, ஜனநாயகன் பாக்ஸ் ஆபீஸை மிஞ்ச வேண்டிய கட்டாயமா?
அமைச்சர் மரிய வில்சன்
logo
Kalki Online
kalkionline.com