

தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்று 1 மாதமாகி விட்டது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் அதிக இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது. இதனையடுத்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்தியன் முஸ்லீம் லீக் யூனியன் மற்றும் விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது தவெக.
ஆட்சி அமைக்கப் போதிய பெரும்பான்மை கிடைக்காத போது, தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்த காங்கிரஸ், விசிக மற்றும் இந்தியன் முஸ்லிம் லீக் யூனியன் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கியது தவெக. இதன்படி காங்கிரஸுக்கு 2, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 1 அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
தவெக சார்பில் 31 எம்எல்ஏ-க்கள் அமைச்சராக பொறுப்பேற்றனர். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தவிர்த்து மீதமுள்ள 75 தவெக எம்எல்ஏ-க்களுக்கு பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் தவெக-வை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை வீழ்த்தி, வெற்றி வாகை சூடிய வி.எஸ்.பாபுவிற்கு அமைச்சர் பதவி தரப்படாதது பெரும் விவாதத்தை எழுப்பியது. அமைச்சரவை பதவியேற்ற பிறகு, இது தொடர்பாக தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தார் வி.எஸ்.பாபு. இந்நிலையில் தவெக-வை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் கட்சியில் மாவட்ட செயலாளர் பதவி கேட்டு வருகின்றனர்.
சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு அதிமுக கட்சி மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக அக்கட்சியை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும் விளாத்திகுளம் எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். அடுத்து இவர் எந்தக் கட்சியில் இணையப் போகிறார் என்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தற்போது வரை அதிமுக எம்எல்ஏக்கள் 5 பேர் ராஜினாமா செய்தது உட்பட, திருச்சி கிழக்கில் முதல்வர் விஜய் ராஜினாமா செய்ததையும் சேர்த்து மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கின்றன.
பெரும்பாலான அதிமுக நிர்வாகிகள் தவெக-வில் இணைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிக இழப்புகளை சந்தித்துள்ள அதிமுக, அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் முதன்முறையாக தவெக-வில் 10 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஏற்கனவே எங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதில் மாவட்ட செயலாளர் பதவியும் வழங்கப்படவில்லை என்றால், நாங்கள் என்ன செய்வது என 10 எம்எல்ஏக்கள் தவெக தலைமை மீது குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
கட்சியில் எழுந்துள்ள இந்த சிக்கலை முதல்வர் விஜய் எப்படி கையாளப் போகிறார் என்பதே தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
தேர்தலுக்குப் பிறகு இதுவரை அதிமுக கட்சியிலேயே பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டன. இந்நிலையில் தற்போது முதன்முறையாக தவெக-வில் எம்எல்ஏ-க்கள் பதவி கேட்டு பிரச்சனை செய்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.