

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத தமிழக வெற்றிக் கழகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் உற்சாகமடைந்த தவெக கட்சி மேலிடம், அடுத்தடுத்து பொதுக்குழு கூட்டங்களை நடத்தி வருகிறது. கரூரில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பு பரப்புரையில் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ஈரோட்டில் மிகப்பெரிய அளவில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை தவெக இன்று கூட்டியது.
தவெக ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் பதவியேற்ற பிறகு, அவருடைய தலைமையில் நடந்த முதல் பரப்புரைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கரூர் சம்பவத்திற்குப் பிறகு ஈரோடு பொதுமக்கள் பரப்பரைக் கூட்டத்தில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் 5 விதிமுறைகளை விதித்தது காவல் துறை.
தவெக கட்சியும் தொண்டர்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு முன்னேற்பாடு வசதிகளை செய்தது. அதிகாலை முதலே தவெக தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக பிரச்சாரக் கூட்டத்திற்குள் வரத் தொடங்கினர்.
ஈரோடு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள தவெக தலைவர் விஜய் சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அஙகிருந்து சாலை மார்க்கமாக விஜயமங்கலத்தை அடைந்தார். இந்நிலையில் காலை 11 மணிக்கு மேல் வருகை தந்த தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
ஈரோடு பெருந்துறை விஜயமங்கலம் அருகே நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்திற்கு, சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதோடு 40 சிசிடிவி கேமராக்கள் மூலம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வந்தது. தமிழக அரசியல் களத்தில் தவெக கட்சிக்கு பொதுமக்கள் அதிக முக்கியத்துவம் தருவதை கடந்த சில நாட்களாக பார்க்க முடிகிறது.
கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே பொதுமக்கள் மத்தியிலே கிடைத்த வரவேற்பை பார்த்து மற்ற கட்சிகள், ஆச்சரியம் அடைந்தன. இந்நிலையில் தவெக-வின் ஒவ்வொரு அசைவையும் மற்ற கட்சிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. மேலும் சில கட்சிகள் தவெக-வை தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளையும் செய்து வருகின்றன.
இந்நிலையில் தவெக-வை அடுத்த அதிமுகவாக மாற்றுவேன் என ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். குறிப்பாக வருகின்ற 2026 ஜனவரி மாதம் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுப்பேன் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுகவில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர்களை தவெக-வில் இணைக்க செங்கோட்டையன் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதனை மனதில் வைத்து தான் ஈரோடு மக்கள் சந்திப்பில் செங்கோட்டையன் இதனை கூறியிருக்கிறார். குறிப்பாக ஓபிஎஸ் தவெக-வில் இணைய இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஈரோடு மக்கள் சந்திப்பில் செங்கோட்டையின் மேலும் கூறுகையில், “வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தவெக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது நிச்சயம். அடுத்த முதல்வராக தமிழகத்தை ஆளப்போவது விஜய் தான். பெரியார் பிறந்த மண்ணிற்கு இன்று விஜய் வருகை தந்துள்ளார் அவரை மனதார வரவேற்கிறேன்.
வருகின்ற 2026 ஜனவரியில் மிகப்பெரிய அதிர்ச்சியை நான் கொடுக்கவிருக்கிறேன். அப்போது தான் தவெக-வின் பலம் மற்ற கட்சிகளுக்குப் புரியும். தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளுக்கு மத்தியில் தவெக வெகு விரைவிலேயே முன்னேறி வந்துள்ளது. அடுத்த அதிமுகவாக, நான் தவெக-வை மாற்றுவேன். சும்மா ரூ.500 கோடி வருமானத்தை உதறிவிட்டு இன்று விஜய் அரசியலில் இறங்கியுள்ளார்.
அன்று நான் புரட்சித் தலைவரை பார்த்தேன்; இன்று புரட்சி தளபதியாக விஜய்யை பார்க்கிறேன்” என செங்கோட்டையன் அனல் பறக்க பேசினார்.
ஈரோட்டில் விஜய்க்கு எதிராக சில போஸ்டர்களும் ஒட்டப்பட்டு இருந்தன. அந்த போஸ்டரில் ‘ஈரோட்டிற்கு அந்த விஜய், கரூருக்கு ஏன் வரவில்லை’ என்பது போன்ற வசனங்கள் எழுதப்பட்டிருந்தன. இருப்பினும் இந்த போஸ்டர்களால் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று நடைபெற்று கொண்டிருக்கும் பொது கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், "மக்களுக்கு பணியாற்ற ஒரு தலைவர் வந்துள்ளார். புரட்சி தலைவருக்கு பிறகு புரட்சி தளபதியை பார்க்கிறேன்.ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாயை விட்டுவிட்டு விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். இது வெறும் கூட்டம் அல்ல. தேர்தலில் தீர்ப்பளிக்கும் கூட்டம். நாளை தமிழகத்தை ஆளப்போவது விஜய்தான். நல்ல தலைவர் தேவை என்ற மக்களின் எண்ணம் நிறைவேறியுள்ளது' என்றார்.