

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்து சாதனையும் படைத்தார் முதல்வர் விஜய். அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் ஆட்சி செய்து வந்த திராவிட கட்சிகளை பின்னுக்குத் தள்ளி தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றியது.
மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலில் அமர காங்கிரஸ் முனைப்பு காட்டி வந்தது. அதேபோல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க பாஜகவும், அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தது. இந்நிலையில் காங்கிரஸ், பாஜக மற்றும் திராவிட கட்சிகள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளியும் தமிழ்நாட்டில் புதிய அரசியல் புரட்சியை செய்துவிட்டார் தவெக தலைவரும், முதல்வருமான விஜய்.
தவெக-வின் அசுரத்தனமான வெற்றியைக் கண்டு, மற்ற மாநிலங்களில் உள்ள அரசியல் தலைவர்களே பொறாமைப்பட்டனர். இந்நிலையில் “தவெக-வுக்கு பெயர் வைத்ததே நான் தான்” என முதல்வர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடரான ரத்தன் பண்டிட் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட போது, பல கட்சிகளில் இருந்த முக்கிய நிர்வாகிகள் தவெக-வில் இணைந்தனர். அதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் செங்கோட்டையன். அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது அக்கட்சிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டது.
சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை பெற்று, வெற்றியை ஈட்டும் என ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் தொடர்ந்து நிர்வாகிகளை ஊக்கப்படுத்திக் கொண்டே வந்தார். இதனை பல பேட்டிகளில் அவர் தெரிவித்து இருந்தார்.
முதல்வர் விஜய் மட்டுமல்ல நடிகர் அஜித்திற்கும் தமிழகத்தின் முதல்வர் ஆவதற்கான வாய்ப்பு இருந்ததாகவும் அவர் கூறியிருந்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழகத்தின் அடுத்த தலைவராக வலம் வருவதற்கான வாய்ப்பு அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவருக்கும் இருந்ததாகவும், அவர்களை சந்தித்து இதனைத் தெரிவிக்க தான் முற்பட்டதாகவும் இதற்கு முந்தைய பேட்டிகளில் ஜோதிடர் ரத்தன் பாண்டி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் தற்போதும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெயர் வைத்ததே நான் தான் என்று தெரிவித்துள்ளார் ரத்தன் பண்டிட். கட்சியின் பெயரான ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்பதன் எண் கணித கூட்டுத் தொகை மற்றும் அதிர்ஷ்ட அமைப்பை முதல்வர் ஜோசப் விஜய்க்குப் பரிந்துரைத்தவர் ஜோதிடர் ரத்தன் பண்டிட்.
கட்சியின் பெயரை உருவாக்கியதில் தனக்கு மிக முக்கியப் பங்குண்டு எனவும், தலைவர் இன்று முதலமைச்சராக அமர்ந்திருப்பதில் மகிழ்ச்சி எனவும் ரத்தன் பண்டிட் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் புகழ்பெற்ற ஜோதிடர் ரத்தன் பண்டிட், ஒருகாலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். தற்போது தவெக நிர்வாகியாக இருக்கும் ரத்தன் பண்டிட்டிற்கு முதல்வரின் சிறப்பு அதிகாரியாக அரசு வேலை வழங்கினார் முதல்வர் விஜய். ஆனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அடுத்த நாளே இந்த அறிவிப்பை ரத்து செய்தார்.
இன்று தமிழ்நாட்டில் தவெக கட்சி தான் முன்னணியில் உள்ளது. இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவில் தவெக அரசு ஆட்சி செய்து வருகிறது. தமிழ்நாட்டில் தவெக அரசு இந்த வாரம் தான் 100 நாட்கள் ஆட்சியைக் கடந்தது. இந்நிலையில் தமிழக மக்கள் எதிர்பார்க்கும் நல்ல திட்டங்களை முதல்வர் விஜய் தொடர்ந்து செயல்படுத்துவார் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.