

தமிழக சட்டசபை 4 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. துறை ரீதியான திட்டங்கள் மீதான விவாதம் இன்று நடந்து வருகிறது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்களைக் கடந்த நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தவெக அரசின் பொற்கால ஆட்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று 110 விதியின் கீழ் பொதுமக்களுக்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய். இதில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருந்த சூழலில், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவித்தார் முதல்வர் விஜய்.
இதன்படி ரூ.75,000 வரை பயிர்க் கடன் வாங்கியவர்களுக்கு முழுக்கடனும் தள்ளுபடி செய்யப்படும். ரூ.75,000 முதல் ரூ.1 லட்சம் வாங்கியவர்களுக்கு ரூ.75,000 வரை தள்ளுபடி செய்யப்படும். மீதித் தொகையை விவசாயிகள் செலுத்த வேண்டும்.
பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறுகையில், “2020-ம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் போதைக் கலாச்சாரம் இல்லை. திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் போதை விற்பனையும், அது தொடர்பான குற்றங்களும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டில் மட்டும் 10,000-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள் ஒழிப்பில் தவெக அரசு உறுதியாக உள்ளது. 100 நாட்களில் 25 ஆண்டுக்கான அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளது தவெக. கேரளாவில் இருந்து போதைப் பொருட்கள் வருவதைத் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் அறிவிப்புகள் ஒருபுறமிருக்க தமிழ்நாட்டில் கடந்த 1 வாரத்தில் நடந்த கொலைகள் பற்றிய பட்டியலை வெளியிட்டு வாதிட்டார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். கோவையில் கல்லூரி மாணவன் அமுதன், சென்னையில் +2 மாணவன் தனுஷ், கும்முடிபூண்டியில் கல்லூரி மாணவர் ரஞ்சன் மற்றும் சென்னை அம்பத்தூரில் ஆட்டோவில் வைத்து பெண் கொலை உள்ளிட்ட சம்பவங்களை சட்டசபையில் முன்வைத்தார் உதயநிதி ஸ்டாலின்.
100 நாள் சாதனை என பெருமை பேசுவதை விட, 100 நாட்களில் சட்டம், ஒழுங்கு நிலையையும் பார்க்க வேண்டும். போதை எதிர்ப்புக்கு எதிரான நடவடிக்கை மற்றும் வன்முறைக்கு எதிராக கவுன்சிலிங் நடத்த வேண்டும் என உதயநிதி தெரிவித்தார்.
மாணவர்களின் கொலை சம்பவங்களைத் தொடர்ந்து, மாணவர் பாதுகாப்பு சட்டம் தேவை என சிபிஐ கட்சி எம்எல்ஏ மாரிமுத்து தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் தான் போதை கலாச்சாரமும், அது தொடர்பான குற்ற வழக்குகளும் அதிகரித்துள்ளதாக பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சி அளித்த பதிலில் திருப்தி இல்லாததால், திமுக வெளிநடப்பு செய்தது.
கோவையில் உயிரிழந்த மாணவன் அமுதன் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார். அதோடு அவரின் தந்தை மற்றும் தாய்க்கு ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்ட முதல்வர்:
சட்டசபையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை, வனத்துறை அமைச்சர் என தவெக அமைச்சர் ரஞ்சித் குமார் கூறினார். இதற்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் கூறியது தவறு தான். அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அந்த விவகாரத்தை முடித்து வைத்தார் முதல்வர் விஜய்.