திருப்பதிக்கு பறந்த தமிழக வேளாண் பட்ஜெட்.! எதிர்பார்ப்பை எகிற வைத்த அமைச்சர்.!

திருப்பதியில் சாமி தரினம் செய்த வேளாண் துறை அமைச்சர்.!
வேளாண் பட்ஜெட்
Agri Budjet
Updated on

தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் விஜய் கடந்த இரண்டரை மாதங்களில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை கொண்டு வந்த போதிலும், அனைவரின் கவனமும் முதல் பட்ஜெட்டின் மீதே உள்ளது.

வருகின்ற ஆகஸ்ட் 5-ம் தேதி தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் ஆகஸ்ட் 6-ல் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் வேளாண் பட்ஜெட் நிதிநிலை அறிக்கையின் நகலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைத்து வழிபட்டார் அமைச்சர் வினோத்.

உலகப்புகழ் பெற்ற திருப்பதி கோயிலுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் அடிக்கடி செல்வது வழக்கம். தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற 2 மாதங்களுக்குப் பிறகு தவெக அரசு சார்பில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதில் எவ்வித பிரச்சினையும் இன்றி வெற்றிகரமாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய வேண்டும் என்பதை முன்னிறுத்தி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வேளாண் பட்ஜெட் நகலை வைத்து ஆசி பெற்றார் வேளாண் துறை அமைச்சர் வினோத். விஐபி பிரேக் தரிசனத்தில் அமைச்சர் ஏழுமலையானை வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அமைச்சரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் பெண்களுக்கான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத் தெகையை ரூ.2,500 ஆக உயர்த்துதல் மற்றும் அனைத்து வகையான பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் ஆகிய திட்டங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டமிட்டபடி மேட்டூர் அணையைத் திறக்காதது மற்றும் காவிரி விவகாரத்தில் ஏற்கனவே தமிழக விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பட்ஜெட்டிலாவது விவசாயிகளுக்கு சாதகமான அறிவிப்புகள் வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குறிப்பாக பருவமழை காப்பீடு, கடன் தள்ளுபடி மற்றும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் ஆகிய மூன்று அறிவிப்புகள் விவசாயிகளுக்கு சாதகமாக இருந்தால் மட்டுமே, தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது

இதையும் படியுங்கள்:
இனி மாரடைப்பு பயமே வேண்டாம்..! வீட்டின் டாய்லெட் சீட்டே இனி உங்களை எச்சரிக்கும்!
வேளாண் பட்ஜெட்
இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்..!! 30 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு: தமிழக அரசின் அதிரடி உத்தரவு!
வேளாண் பட்ஜெட்

வேளாண் பட்ஜெட்டைப் பொறுத்தவரை, விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் குறித்த திட்டங்களில் மாறுதல்களை கொண்டு வரலாம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மானியக் கடன், கூட்டுறவுக் கடன் தள்ளுபடி, உர மானியம், நெல் கொள்முதல், குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு உள்ளிட்டவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே, அமைச்சர் அதனை வெளி மாநிலத்திற்கு எடுத்துச் சென்றது மரபை மீறிய செயல் என பலரும் விமர்சித்து வருகின்றனர். பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, அதன் நகலை கோயிலில் வைத்து வழபடுவதும், வெளி மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதும் தமிழக அரசியல் வரலாற்றில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரின் இந்த செயல் குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறுகையில், “பட்ஜெட் ஆவணம் என்பது இறைவனுக்கான காணிக்கையோ அல்லது ஆன்மீகப் பொருளோ அல்ல. பொதுமக்களின் வரிப் பணம் எப்படி செலவிடப்படும் என்பதை எடுத்துரைக்கும் அரசியல் ஆவணம். தனிமனிதர்களின் நம்பிக்கைக்கு அரசியல் சாசன ஆவணங்களை காணிக்கை ஆக்குவது அரசியல் சட்ட விரோதமாகும்” எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

logo
Kalki Online
kalkionline.com