

இன்றைய நவீன யுகத்தில் நடுத்தர வயதினருக்கு கூட மாரடைப்பு ஏற்படுவது சாதாரணமாகி விட்டது. இருப்பினும் மாரடைப்பு திடீரென ஏற்படுவது இல்லை. அதற்கு முன்பே பல அறிகுறிகளை அது காட்டி விடும். ஆனால் அதனை நம்மில் பலரும் கண்டு கொள்வதில்லை. முறையற்ற உணவுப் பழக்கமும் மாரடைப்பு ஏற்பட ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இதய செயல்பாட்டைத் தொடர்ந்து கண்காணிக்கும் புதிய ஸ்மார்ட் டாய்லெட் சீட்டைக் கண்டுபிடித்துள்ளது ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு நிறுவனம். மருத்துவ மற்றும் தொழிலுநுட்ப உலகில் இந்த கண்டுபிடிப்பு மற்றுமொரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ள நிலையில், அதன் பயன்பாடுகள் நமக்கு பெரிதும் உதவி வருகிறது. அவ்வகையில் ஸ்மார்ட் டாய்லெட் சீட், மூத்த குடிமக்கள் மற்றும் மாரடைப்பு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த Hamberger என்ற மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனம், மாரடைப்பு ஏற்படுவதைக் கண்டறிய உதவும் ஸ்மார்ட் டாய்லெட் சீட்டை கண்டுபிடித்து அசத்தியுள்ளது. இதயத்தின் அசாதாரண துடிப்பைக் (Atrial fibrillation - AFib) இந்த ஸ்மார்ட் டாய்லெட் சீட் எளிதாக கண்டுபிடித்து விடும்.
இந்த இருக்கையில் அமரும்போது 30 விநாடிகளில் இதயத் துடிப்பைக் கண்காணித்து, மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா அல்லது இல்லையா என்பதைக் கண்காணிக்கும். ஒருவேளை மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தால், இந்த இருக்கையுடன் இணைக்கப்பட்ட மொபைல்போனுக்கு சிக்னல் கொடுத்து, அவசர உதவி வேண்டும் என அழைப்பு விடுக்கும்.
மூத்த குடிமக்கள் மற்றும் இதய நோய்க்கு சிகிச்சை எடுத்து வருபவர்கள், தங்கள் வீட்டில் இருந்து கொண்டே இதய ஆரோக்கியத்தை தொடர்ச்சியாகக் கண்காணிக்க ஸ்மார்ட் டாய்லெட் சீட் உதவும். இந்த சீட் இதய நோயாளிகளுக்கு நல்ல பலன் தரக் கூடியது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
நன்மைகள்:
* ஸ்மார்ட் டாய்லெட் சீட்டைப் பயன்படுத்தினால், இனி இதய ஆரோக்கியத்தைக் கண்டறிய உடலில் எந்த சாதனத்தையும் மாட்டிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை.
* எப்போதும் போல கழிவறையைப் பயன்படுத்தும் சமயத்திலேயே தரவுகள் சேகரிக்கப்படும்.
* இதய செயலிழப்பு அல்லது உயர் இரத்த அழுத்தப் பிரச்சினை இருக்கும் நோயாளிகளின் உடலில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அதனை உடனே கண்டறிந்து விடும். இதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை முன்கூட்டியே நமக்கு எச்சரித்து விடும்.
* ஸ்மார்ட் டாய்லெட் சீடடுகள் WiFi அல்லது கிளவுட் தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால் இதில் சேகரமாகும் தரவுல்கள் அனைத்தும் உடனுக்குடன் மருத்துவர்கள் அல்லது சம்பந்தப்பட்டவரின் தொலைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும்.
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.