

தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஓரங்கட்டி, ஆட்சியில் அமர்ந்த தவெக தொடக்கம் முதலே பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக லஞ்சத்தை ஒழிக்க முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதன்படி லஞ்சம் தொடர்பான புகார்களை அளிக்க வாட்ஸ்அப் எண் வெளியிடப்பட்டது. மேலும் பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்க்கவும் தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதன்படி இனி பொதுமக்கள் அளிக்கும் அனைத்து மனுக்களுக்கும் அடுத்த 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குடிநீர், மின்வெட்டு, ரேஷன் பொருட்கள், மகளிர் உதவித்தொகை ஓய்வூதியம் மற்றும் அரசு சேவை தொடர்பான புகார்கள் தான் பொதுமக்களிடம் இருந்து அதிகளவில் குவிகின்றன. பொதுவாக பொதுமக்கள் அளிக்கும் மனுக்களின் மீதான தீர்வு கிடைக்க பல மாதங்கள் வரை ஆகும். அதில் சில மனுக்களுக்கு அரசு அதிகாரிகள் நடவடிக்கையே எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் அதிகரித்து வந்தன.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அனைத்து துறை அரசு அதிகாரிகளுக்கும் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது தமிழக அரசு. தலைமை செயலர் சாய்குமார் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், “பொதுமக்கள் அளிக்கும் அனைத்து மனுக்களுக்கும் அடுத்த 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும். துறை சார்ந்த முக்கிய விவகாரங்கள் குறித்து தமிழக அமைச்சர்களுக்கு, அனைத்து துறை செயலர்கள் மற்றும் தலைவர்கள் அவ்வப்போது தகவல்கள் வழங்க வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் மனுக்களின் தீர்வு நிலை வாரந்தோறும் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம்” என உத்தரவிடப்பட்டுள்ளது.
துறை சார்ந்த தலைவர்கள் அனைவரும் தமிழக அரசால் ஏற்கனவே வழங்கப்பட்ட வழிகாட்டுதலின் படி, ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் கட்டாயம் கள ஆய்வை மேற்கொள்ள வேண்டும். மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் கள ஆய்வுகள் முடிந்த பிறகு, ஆய்வு குறித்த அறிக்கையை உடனுக்குடன் தமிழக அரசுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் அனுப்பி வைக்க வேண்டும்.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் அனைத்து மனுக்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் மனுக்களின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம்.
மனுக்கள் தேக்கமடைவதைத் தவிர்க்க, விரைந்து அதற்கான தீர்வை எடுக்க வேண்டும் என தலைமை செயலர் சாய்குமார் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் அளிக்கும் மனுக்களின் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணவில்லை என்றால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில் தற்போது 30 நாட்களுக்குள் மனுக்களுக்கு தீர்வு காணும் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
அரசு அலுவலகங்களில் யாரேனும் லஞ்சம் கேட்டால் என்ற 94981 80936 வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம். இதற்கு முன்னதாக சில அலுவலகங்களில் மனுக்களைப் பெறுவதற்கே லஞ்சம் கேட்கப்பட்டது. ஆனால் தற்போதைய சூழலில் லஞ்சத்தை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் மனு அளிக்கும் போதோ அல்லது அரசின் சேவைகளைப் பெறும் போதோ லஞ்சம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மாறாக லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் அளிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்.
தற்போது அமலுக்கு வந்துள்ள 'மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு' என்ற திட்டத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற தகவல்கள் வெளியாக குறைந்தபட்சம் 2 மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது.