‘இது முதல்முறையல்ல!’ - விவசாயிகள் வழக்கு ரத்து குறித்து வரலாற்றை புரட்டிய உதயநிதி!

திமுக ஆட்சியில் கிட்டத்தட்ட 5,000-க்கும் அதிகமான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்image credit-@Office_of_Udhay
Updated on

விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது இது முதல்முறையல்ல என்று திமுக ஆட்சியில் கிட்டத்தட்ட 5,000-க்கும் அதிகமான வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி பட்ஜெட்டிற்காக கூடிய தமிழக சட்டசபை இதுவரை விறுவிறுப்பு குறையாமல் நடந்து வருகிறது. கடந்த காலங்களில் குறிப்பிட்ட மணி நேரம் மட்டுமே நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர் தற்போது தவெக ஆட்சி காலத்தில் காலை 9.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை நடைபெறுகிறது.

அவையின் செயல் நேரம் அதிகரிக்கப்பட்டதால் பல்வேறு துறை சார்ந்த விவாதங்கள் விரிவாக நடத்தப்படுகிறது. முந்தைய அரசின் திட்டங்கள் மற்றும் தற்போதைய அரசின் கொள்கைகள் குறித்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதங்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்றைய சட்டசபை கூட்டத்தில் 110-ம் விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரையிலான திமுக ஆட்சி காலத்தில் தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய போது (விவசாயிகள் போராட்டம்)அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மனித நேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

தவெக ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் கோரிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்றும், விவசாயிகள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு துணை நிற்கும் என்றும் முதலமைச்சர் விஜய் உறுதியாக கூறினார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை என்று ஒரு அமைச்சர் பேசியிருந்தார்.

அது சரியான தகவல் அல்ல என்று கூறினார். மேலும் முந்தைய திமுக ஆட்சிக்காலங்களிலும், பிற ஆட்சிகளிலும் விவசாயிகள் நலன் கருதி வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அதுகுறித்த முக்கியப் பட்டியலை அவையில் சமர்ப்பித்தார்.

முதலமைச்சர் விஜய்|விவசாயிகள் போராட்டம்
முதலமைச்சர் விஜய்|விவசாயிகள் போராட்டம்

முந்தைய ஆட்சியில், 8 வழிச் சாலை திட்டம், வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்டவைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட சுமார் 5,000-க்கும் மேற்பட்ட வழக்குகளை முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் ரத்து செய்துள்ளதாக தெரிவித்தார்.

அப்போது 110 விதியின் கீழ் ரத்து செய்யப்படவில்லை. அதிகாரிகளை அழைத்து உத்தரவிட்ட பிறகு, சட்டப்பேரவையில் தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ்- முதலமைச்சர் விஜய்..!
உதயநிதி ஸ்டாலின்

விவசாயப் போராட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவது என்பது தமிழக அரசியல் வரலாற்றில் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு ஜனநாயக மரபுதானே தவிர, இதுவொன்றும் தவெக ஆட்சியில் நடக்கும் முதல்முறை நிகழ்வல்ல.

தற்போதைய அரசு முந்தைய திமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது போல, தற்போதைய தவெக ஆட்சியில் இனிவரும் காலங்களில் விவசாயிகள் போராடினால் அவர்கள் மீது வழக்குகள் போடப்படாமல் இருக்குமா? அல்லது போடப்படும் வழக்குகள் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வியையும் திமுக தரப்பு எழுப்பியுள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்பை வரவேற்றாலும், இது புதிய நடைமுறை அல்ல என்பதை முந்தைய திமுக ஆட்சிகளின் அரசாணைகள் மற்றும் பட்டியல்களை ஆதாரமாகக் காட்டி உதயநிதி ஸ்டாலின் அவையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து வேளாண் அமைச்சர் பேசிய போது, விவசாயிகள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டதாக குறிப்பிட்டார். அதனை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு கோரிக்கை வைத்தார்.

இதையும் படியுங்கள்:
தமிழகத்தில் புதிதாக 196 துணை மின் நிலையங்கள் - முதலமைச்சர் விஜய் அறிவிப்பு..!
உதயநிதி ஸ்டாலின்

அந்த கோரிக்கையை ஏற்ற சட்டசபை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், பொய் வழக்கு என்ற வார்த்தை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும் எனத் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com