வாழைப்பழத்திலும் ரசாயன கலப்படமா ? உடுப்பியில் 10 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்..!

10,000 கிலோ ரசாயன வாழைப்பழம் பறிமுதல்!: கர்நாடகாவில் அதிரடி சோதனை - ரசாயன பழங்களை எளிதாகக் கண்டறிவது எப்படி?
Chemically Ripened Bananas
Chemically Ripened Bananassource:newsfirstkannada
Updated on

வறியவர்களின் பழமாக அந்தக் காலத்தில் இருந்து இந்த காலம் வரை இருப்பது வாழைப்பழங்கள் தான் . இரண்டு வாழைப்பழங்களை சாப்பிட்டு விட்டு பணிக்கு செல்பவர்களும், படிக்க செல்பவர்களும் அநேகம் பேர் உண்டு. உடல் நலம் இல்லை என்றாலும் உடல் நலத்தை தரும் என்பதுடன் மலிவான விலையில் எளிதில் கிடைக்கக்கூடியதும் ருசியாக இருப்பதாலு வாழைப்பழத்தின் மகத்துவம் பழங்களில் சற்று அதிகம் எனலாம்.

அந்த காலத்தில் உரங்கள் இன்றி இயற்கையாக அனைத்தும் கிடைத்த நிலையில் இன்று கலப்படம் என்பது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. மரபணு மாற்றங்கள் மூலம் இயற்கையாக கிடைக்கக்கூடிய அனைத்தும் இப்போது செயற்கையாக உருவாக்கப்பட்டு எளிதில் கெடாமலும் நீண்ட நாள் வைத்து சாப்பிடும்படி உள்ளது. ஆனால் இதில் எத்தனை தீங்கு இருக்கிறது என்பதை கவனித்தால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருப்போம் .

அந்த வகையில் வாழைப்பழத்திலும் ரசாயனம் கலந்திருப்பதாக கர்நாடகாவில் 10 ஆயிரம் கிலோ வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அந்தப் பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை தரும் விஷயமாக உள்ளது. கர்நாடகாவில் பறிமுதல் செய்யப்பட்ட வாழைப்பழங்கள் போல நமது தமிழ்நாட்டிலும் இருக்குமோ என்ற அச்சத்தை தருகிறது இந்த செய்தி.

கர்நாடகாவில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 10,000 கிலோ வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அலிவூர், கெம்தூர் மற்றும் டுகிலிபடவு ஆகிய கிராமங்களில் உள்ள கடைகள் மற்றும் கிடங்குகளில், ரசாயனங்களைப் பயன்படுத்தி வாழைப்பழங்களை செயற்கையாகப் பழுக்க வைக்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகள் திடீர் சோதனைகளை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையின் போது, ​​ஒரு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 10,890 கிலோ ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த சரக்கின் மதிப்பு சுமார் ரூ. 8.71 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

artificially ripened bananas
artificially ripened bananassource:Deccan chronicle

பறிமுதல் செய்யப்பட்ட வாழைப்பழங்கள் அதிகாரப்பூர்வமாக அந்த கிடங்கிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நுகர்வோராக இந்த செய்தி அனைவருக்கும் எச்சரிக்கை தரும் விதமாக உள்ளது. சந்தையில் நாம் வாங்கும் அடர் மஞ்சள் நிறத்தில் உள்ள அனைத்து வாழைப்பழங்களும் இயற்கையாகப் பழுத்தவை அல்ல என்பதை அறிந்துகொள்வது அவசியம். சில பழங்கள் கால்சியம் கார்பைடு போன்ற ரசாயனங்களைப் பயன்படுத்தி செயற்கையாகப் பழுக்க வைக்கப்படுகின்றன. இவை வயிறு உபாதைகள் போன்ற தீவிர உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

சில எளிய அறிகுறிகளைத் தெரிந்துகொள்வதும் செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட வாழைப்பழங்களை எப்படிக் கண்டறிவது என்பதைத் தெரிந்துகொள்வது சரியானதைத் தேர்ந்தெடுத்து வாங்க உதவும்.

இதைக் கண்டறிய எளிதான வழிகளில் ஒன்று, பழத்தின் தோலை உற்று நோக்குவதாகும். 'நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின்' (National Library of Medicine) வெளியிட்ட ஆய்வின்படி, இயற்கையாகப் பழுத்த பழங்களின் நிறம் பொதுவாக சீரற்றதாக இருக்கும். இயற்கையாகப் பழுத்த வாழைப்பழத்தில் பச்சை, மஞ்சள் மற்றும் சில பழுப்பு நிறத் திட்டுக்கள் கூட இருக்கலாம். மறுபுறம், செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட வாழைப்பழங்கள் சீரான மஞ்சள் நிறத்தில் தோன்றினாலும், பார்ப்பதற்கு இயற்கையான ஈர்ப்புடன் இருக்காது என்பதை கவனிக்க வேண்டும்.

குறிப்பாக வாழைப்பழத்தின் வாசனையையும் கவனிக்கலாம். இயற்கையாகப் பழுத்த வாழைப்பழங்கள் பொதுவாக இனிமையான நறுமணத்துடனும், இயற்கையான இனிப்புச் சுவையுடனும் இருக்கும். செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட பழங்களில் மிகக் குறைந்த அளவிலேயே வாசனை இருக்கலாம். பழத்தின் தன்மை மற்றும் சுவை ஆகியவை மற்றொரு அடையாளமாகும்.

ஒரு வாழைப்பழம் வெளிப்புறத்தில் முழுமையான மஞ்சள் நிறத்தில் தெரிந்தாலும், அதன் உட்பகுதி புளிப்புச் சுவையுடனோ அல்லது இன்னும் பழுக்காமலோ இருக்கலாம்; இது அப்பழம் செயற்கையான முறையில் பழுக்கவைக்கப்பட்டதைக் குறிக்கிறது.

பழம் எவ்வளவு காலம் கெடாமல் இருக்கிறது என்பதும் ஒரு முக்கிய அறிகுறியாகும். இயற்கையாகப் பழுத்த வாழைப்பழங்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்கும். ஆனால் செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டவை குறுகிய காலத்திலேயே தோலில் கருமையான திட்டுக்களை உருவாக்கக்கூடும் என்கின்றனர் உணவு வல்லுநர்கள்.

இனி வாழைப்பழங்களை வாங்கும் முன் நாமும் உஷாராக இருப்பது அவசியம்.

வாழைப்பழத்தின் சதை பகுதி(Flesh part) மட்டும் மஞ்சளாகவும், அதன் காம்பு மற்றும் நுனிப் பகுதி பச்சையாகவும் இருந்தால், ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. பழங்களை விரைவாகப் பழுக்க வைக்க பொதுவாக கால்சியம் கார்பைடு பயன்படுத்தப்படுகிறது.

நிபுணர்கள் கூற்றுப்படி, வாழைப்பழங்களை கால்சியம் கார்பைடு கலந்த தண்ணீரில் முக்கி எடுக்கும்போது, அதன் தோல் பகுதி மட்டும் உடனடியாக மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. காம்பு மற்றும் நுனிப் பகுதிகள் மட்டும் பச்சையாக இருக்கும்.

இயற்கையாக பழுத்த வாழைப்பழத்தில் எத்திலீன் வாயு சமமாக பரவி அதன் காம்பு மற்றும் நுனிப் பகுதிகள் கருமை நிறத்திற்கு மாறும். இது அந்தப் பழம் மரத்திலேயே அல்லது இயற்கையான சூழலில் முழுமையாக முதிர்ச்சி அடைந்ததற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.

ரசாயனத்தால் பழுத்த வாழைப்பழங்களால் வரும் ஆபத்து :

வாழைப்பழத்தை கால்சியம் கார்பைடு பயன்படுத்தி பழுக்கவைக்கும் போது, அதிலுள்ள arsenic, phosphorus போன்ற நச்சுத் துகள்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம்.

தலைச்சுற்றல், பலவீனம், அலர்ஜி உட்பட பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
உண்மையான பேரிச்சம்பழம் vs போலி பேரிச்சம்பழம்: வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை என்ன?
Chemically Ripened Bananas
logo
Kalki Online
kalkionline.com