

“லெட்ஸ் கோவா 2026 – ரிக்க்ஷா ரேலி” (Let’s Goa 2026 Rickshaw Rally) என்பது சமூக நலத்திற்காக நடத்தப்படும் ஒரு விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டும் ஆட்டோ ரிக்ஷா பயணமாகும்.இங்கிலாந்தைச் சேர்ந்த எம்மா சேல் (Emma Sayle) தலைமையில், 35 பெண் தொழில்முனைவோர்களைக் கொண்ட ‘சிஸ்டர்ஹுட் குழு’ (Sisterhood Group - UK) இந்தச் சாகசப் பயணத்தை முன்னெடுத்துள்ளது.
சிஸ்டர்ஹுட் குழு (Sisterhood Group (UK).) எனும் இந்த அமைப்பு 2006-ல் தொடங்கப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த 35 பெண்கள் தொழில் முனைவோர் Emma Sayle தலைமையில் ஒன்றிணைந்து இயங்கும் சமூக அக்கறை கொண்ட இந்தக் குழு உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தும் இந்த ஆட்டோ சவாரி மூலம் நிதி திரட்டி பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கின்றனர்.
இதில் பெண்கள் தாங்களே ஆட்டோ ரிக்க்ஷா (tuk-tuk) ஓட்டி பயணம் செய்வார்கள். இந்திய நகரங்கள், கிராமங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக பயணம் வழியில் சமூக சேவை திட்டங்களை பார்வையிடுவதே ரேலியின் தனிச்சிறப்பு. மேலும் இதன் மூலம் ₹1 – ₹3 கோடி வரை நிதி திரட்டுவது நோக்கமாக கொண்டுள்ளது.
மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தக் குழு தற்போது தமிழ்நாட்டுப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு நிதி திரட்டும் முயற்சியாக, சென்னை டு கோவா வரை, சுமார் 1,000 கிமீ ஆட்டோ சவாரியை சென்னையில் இருந்து மேற்கொண்டுள்ளனர். சென்னையிலிருந்து கோவா செல்லும் இந்த சாகச மற்றும் நிதி திரட்டல் பயணம் (மார்ச் 2026) மார்ச் 3 லிருந்து மகளிர் தினமான 8 வரை நடைபெற்று நிறைவடைகிறது.
கடந்த ஆண்டு (2025) மெட்ராஸ் மிட் டவுன் ரவுண்ட் டேபிள் 42 (MMRT42) மற்றும் மெட்ராஸ் மிட் டவுன் லேடீஸ் சர்க்கிள் 7 (MMLC7) ஆகியவற்றுடன் இணைந்து சென்னையில் இருந்து இந்தக் குழு முன்னெடுத்த இந்த பயணத்தில் சுமார் 70 தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர். அதன் வெற்றியைத் தொடர்ந்து இந்தாண்டும் சிஸ்டர்ஹுட் குழுவைச் சேர்ந்த சுமார் 35 பெண்கள் இந்த பயணத்தை துவங்கியுள்ளது சிறப்பு. இவர்கள் அனைவரும் 14 ஆட்டோக்களில் குழுக்களாகப் பிரிந்து, சென்னையில் இருந்து கோவாவிற்கு 1,000 கி.மீ பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணத்தில் சென்னை , கர்நாடகா ,மகாராஷ்டிரா வழியாக கோவாவை அடையும் பாதை வகுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து MMRT42ன் தலைவர் சித்தார்த் சங்கர் அளித்த பேட்டியில்,“சென்னையிலிருந்து கோவா வரையிலான இந்த 1,000 கிலோமீட்டர் பயணம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சிகளை ஆதரிப்பதற்காக ரூ.1-3 கோடி வரை நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது.
சிஸ்டர்ஹுட் குழுமம் இங்கிலாந்து மட்டுமின்றி, உலகளவிலும் நிதி திரட்டி வருகிறது. கடந்தாண்டு எங்கள் குழுவிற்கு கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து, இந்தாண்டும் நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளோம். ஒவ்வொரு மாலையும், அவர்கள் நாங்கள் ஏற்பாடு செய்த இடங்களில் தங்குவார்கள். பயணங்களுக்கு இடையில் தங்களது திட்டங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளும் வகையில் சந்திப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்று கூறியுள்ளார்.
இந்தியா ஒரு இயற்கையான தேர்வாக இருந்ததாகவும் அதன் பன்முகத்தன்மை மற்றும் அடிமட்டத்தில் பெண்கள் வகிக்கும் முக்கிய பங்கு ஆகியவை அதை நம்பமுடியாத அளவிற்கு ஆச்சரியம் அளிப்பதாகவும் ரிக்ஷா பேரணி இங்கு அன்றாட வாழ்க்கையை பிரதிபலிக்கிறது என்றும் , MMRT42 மற்றும் MMLC7 போன்ற அமைப்புகளுடன் கூட்டு சேர்வது, திரட்டப்பட்ட நிதி அளவிடக்கூடிய தாக்கமாக மாற்றப்படுவதை உறுதி செய்கிறது. லெட்ஸ் கோவா 2026 ரிக்ஷா பேரணி மூலம், நிதி திரட்டலுக்கு அப்பால் பெண்களின் உடல்நலம், திறன் மற்றும் பொருளாதார சுதந்திரத்தைச் சுற்றி நிலையான மாற்றத்தை உருவாக்க விரும்புகிறோம் எனவும் கூறுகிறார் இதன் தலைமையான எம்மா சேல்.
இந்தப் பேரணிக்கான நன்கொடைகளை சிஸ்டர்ஹுட் பேரணி 2026 ஆன்லைன் போர்டல் மூலம் வழங்கலாம். ஒவ்வொரு பங்களிப்பும் தங்களது திட்டங்களை வலுப்படுத்துவதை நோக்கிச் செல்லும் என்கிறது சிஸ்டர்ஹுட்.
பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கான இலக்காக நிறுவப்பட்ட சிஸ்டர்ஹுட் குரூப்பானது, சவால் நிறைந்த தொண்டு நிறுவனமாக நீண்ட கால முயற்சியில் தனது அடையாளத்தை உருவாக்கியுள்ளது. அதன் நிறுவனரான எம்மா சேல், ‘இந்த மாதிரியான சவாலான பயணங்கள், உடல் ரீதியான சவாலாக மட்டுமல்லாமல், மன ரீதியான சவாலையும் உள்ளடக்கியது,’ என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.