

வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்தும் வேலை கிடைக்காதவர்களுக்கு தமிழக அரசு மாதந்தோறும் ரூ.1000 வரை உதவித் தொகை வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் வரும் ஜூலை 31-ம்தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கலெக்டரிடம் சமர்பிக்க வேண்டும் என்று மாவட்ட வாரியாக அறிவிப்பு வெளியாகி வருகிறது.
தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் பொருளாதாரத் தேவைகளை ஓரளவுக்குப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் ‘படித்த வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை வழங்கும் திட்ட’த்தை (Unemployment Assistance Scheme) செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் குறித்து சிலருக்கு தெரியும். ஆனால், பலருக்கு இது குறித்த விழிப்புணர்வு இருக்காது.
உங்களுக்கும் இந்த திட்டம் குறித்து தெரியாது என்றால் இந்த தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க என்ன தகுதி, எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை இங்கே அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகளாக வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் (Unemployment Assistance Scheme) மீண்டும் கவனம் பெற்று வருகிறது. கல்வித்தகுதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தகுதிகளின் அடிப்படையில் மாதம் ரூ.200 முதல் ரூ.1000 வரை இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலை தேடி அலைபவர்களுக்கும், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்களுக்கும் இந்த உதவித்தொகை ஓரளவு உதவியாக அமைந்துள்ளதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.
பள்ளி படிப்பு முதல் டிகிரி வரை முடித்து வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். குறிப்பாக பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் கூட இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
ஆனால் ஏற்கனவே 12 காலாண்டுகள் உதவித்தொகை பெற்று முடித்தவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்தினராக இருந்தாலும் இந்த விதிமுறை பொருந்தும்.
முக்கிய தகுதிகள்: (வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை)
பதிவுக் காலம்: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் காத்திருப்பவராக இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள்: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தாலே விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
வயது வரம்பு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு(SC/ST) 45 வயதுக்குள்ளும், மற்ற வகுப்பினருக்கு 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி, பட்டப்படிப்பு (Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். (அஞ்சல் வழியில் படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்).
இருப்பிடம்: தங்களது பள்ளி/கல்லூரிக் கல்வியை முழுமையாகத் தமிழ்நாட்டில் முடித்திருக்க வேண்டும் அல்லது பெற்றோர்/பாதுகாவலர் குறைந்தது 15 ஆண்டுகள் தமிழ்நாட்டில் குடியிருந்திருக்க வேண்டும்.
வருமான வரம்பு: குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருக்க வேண்டும்.
இதர நிபந்தனைகள்: விண்ணப்பதாரர் முற்றிலும் வேலையில்லாதவராக இருக்க வேண்டும் (சுய வேலைவாய்ப்பிலும் ஈடுபட்டிருக்கக் கூடாது). மேலும், கலைஞர் உரிமைத்தொகை அல்லது வேறு எந்தவொரு அரசு நிதியுதவியையும் பெறுபவராக இருக்கக் கூடாது.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?
பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை அறிவியல் போன்ற தொழில்நுட்பப் பட்டங்கள் பெற்றவர்கள் இவ்வுதவித்தொகை பெற தகுதியற்றவர்கள்.
நிதியுதவி விவரம்:
10-ஆம் வகுப்பு / மெட்ரிக் (தோல்வியடைந்தவர்களுக்கு): மாதம் ரூ.200
10-ஆம் வகுப்பு / மெட்ரிக் (தேர்ச்சி பெற்றவர்களுக்கு): மாதம் ரூ.300
12-ஆம் வகுப்பு / மேல்நிலைக் கல்வி: மாதம் ரூ.400
பட்டதாரிகள் (UG Graduates): மாதம் ரூ.600
முதுகலை பட்டதாரிகள் (PG Graduates): மாதம் ரூ.1000
மாற்றுத்திறனாளிகள்:
மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் கல்வித்தகுதியைப் பொறுத்து மாதம் ரூ.600 முதல் ரூ.1000 வரை வழங்கப்படுகிறது.
SSLC மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு : ரூ.600/
மேல்நிலைக்கல்வி (12-ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்களுக்கு : ரூ.750/
பட்டதாரிகளுக்கு (Degree Holders) : ரூ.1000/
இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. உதவித்தொகை பெறுவதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து (scholarship application) குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும் என்பதும் பதிவை தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் அருகில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து விண்ணப்பப் படிவங்கங்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
முதல்முறையாக விண்ணப்பிப்பவர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்துடன் வங்கி கணக்குப் புத்தகம் (Bank Passbook), ஆதார் கார்டு, குடும்ப அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
அல்லது, https://tnvelaivaaippu.gov.in அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின் பூர்த்தி செய்த படிவத்தை ஜூலை 31-ம்தேதிக்குள் கலெக்டரிடம் சமர்பிக்க வேண்டும்.
இதற்கான அறிவிப்பு மாவட்ட வாரியாக வெளியாகி வருகிறது.
ஆனால் ஏற்கனவே 12 காலாண்டுகள் உதவித்தொகை பெற்று முடித்தவர்களுக்கு மீண்டும் உதவித்தொகை வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.