
உலகின் பல்வேறு நாடுகளில் பள்ளிகளில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதை தடை செய்துள்ளனர். சில நாடுகளில் கல்லூரிகளிலும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவது தடை செய்யப் பட்டுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களை தடை செய்துள்ளது. அதேசமயம் இந்தியாவில் இந்த விஷயத்தில் இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
யுனெஸ்கோவின் உலகளாவிய கல்வி கண்காணிப்புக் குழுவின் அறிக்கையின் படி, 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள், உலகில் சுமார் 60 கல்வி அமைப்புகள் பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களைத் தடை செய்திருந்தன. கடந்த ஆண்டு இறுதிக்குள், மேலும் 19 கல்வி நிலையங்கள் இந்த பட்டியலில் இணைந்தன. இதனால் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்தது. இதனால் உலகின் கல்வி முறைகளில் சுமார் 40 சதவீதம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் தேவையில்லை என்று கருதுகின்றனர். ஸ்மார்ட்போன்கள் பள்ளிகளில் பயன்படுத்துவதை பற்றி சில நாடுகளின் நிலையை பார்ப்போம்.
அமெரிக்கா:
யுனெஸ்கோ உலகளாவிய கல்வி கண்காணிப்புக் குழுவின் அறிக்கையின் படி, அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 20 மாநிலங்களில் கல்வி நிலையங்களில் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்த தடை உள்ளது. கலிபோர்னியாவில் பள்ளிக் கூடங்களில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தடை உள்ளது. இந்தியானாவில் மாணவர்கள் வயர்லெஸ் சாதனங்களைப் கூட பயன்படுத்த தடை உள்ளது. அதே நேரத்தில் மாநிலத்தின் சில பள்ளிகளில் ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டை அனுமதிக்கிறது. இந்த தடை பெரும்பாலும் பள்ளிகளின் தனிப்பட்ட முடிவாக தான் உள்ளது.
ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலியாவில் மொத்தம் ஒன்பது மாநிலங்களில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே பள்ளிகளில் ஸ்மார்ட்போன்களை தடை செய்துள்ளனர்.
சீனா:
சீனாவின் சில மாநிலங்களில் உள்ள பகுதிகளில் மட்டும் பள்ளிகளில் ஸ்மார்ட்போன்கள் தடை செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில், சீனாவின் ஜெங்சோ நகரில், தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் தொலைபேசி பயன்பாடு முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ்:
பிரான்ஸ் நாட்டில் பள்ளிக் கூடங்களில் ஸ்மார்ட்போன்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதே நேரம் மாணவர்களுக்கு போன் பயன்படுத்த டிஜிட்டல் இடைவேளைகளும் உள்ளன.
ஸ்பெயின்:
ஸ்பெயின் நாட்டில் பாஸ்க், லா ரியோஜா மற்றும் நவரே ஆகிய பகுதிகளை தவிர, மற்ற பகுதிகளில் உள்ள பள்ளிகளில் ஸ்மார்ட்போன்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேல் :
இஸ்ரேல் நாட்டில் மழலையர் பள்ளிகளில் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதை இஸ்ரேல் அரசு முழுமையாக தடை செய்துள்ளது. இடை நிலை , மேல் நிலை பள்ளிகளில் பெரும்பாலான இடங்களில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது தடையில் உள்ளது.
இந்தியா:
இந்தியாவிலும் பல பள்ளிகளில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையைப் பின்பற்றுவது பற்றி பள்ளி நிர்வாகம் முடிவு செய்யும். அரசு பள்ளிகளில் ஸ்மார்ட்போன் தடை பற்றி அந்தந்த மாநில நிர்வாகம் முடிவு எடுக்கும். பல மாநிலங்களில் இடை நிலைக் கல்வி வரை ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை உள்ளது.
யுனெஸ்கோவின் உலகளாவிய கல்விக் குழுவின் அறிக்கையின்படி, உலகின் 14 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களிடம் செய்யப்பட்ட ஒரு ஆய்வில், ஸ்மார்ட் போன்களால் குழந்தைகள் படிப்பிலிருந்து திசை திருப்பப்படுகின்றனர் என்று கண்டறிந்துள்ளனர். ஒருமுறை மாணவர்கள் கவனம் சிதறினால், அவர்கள் மீண்டும் கவனம் செலுத்த சுமார் 20 நிமிடங்கள் ஆகிறது இது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்கின்றனர்.