
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (22.08.2025) 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (22.08.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-11ல் எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள ஶ்ரீராம் தயாள் கேம்கா விவேகானந்தா வித்யாலயா ஜூனியர் கல்லூரி, மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-21ல் பாடசாலை தெருவில் உள்ள ஜெயம் மஹால், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-30ல் கொளத்தூர், கல்பாளையம் லட்சுமிபுரம், பெரம்பூர் ரெட்ஹில்ஸ் நெடுஞ்சாலையில் உள்ள ஶ்ரீசெல்வலட்சுமி திருமண மண்டபம், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-39ல் புதுவண்ணாரப்பேட்டை, செரியன் நகரில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி மைதானம், திரு.வி.க.நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-71ல் பெரம்பூர், பள்ளி சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-88ல் பாடி, டி.வி.எஸ். நகர் 2வது தெருவில் உள்ள அன்னை மண்டபம், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-108ல் சேத்துப்பட்டு, மேயர் ராமநாதன் சாலையில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடல், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-118ல் இராயப்பேட்டை, ஶ்ரீநிவாச பெருமாள் சன்னதி தெருவில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-146ல் மதுரவாயல், பி.எச். சாலையில் உள்ள சீதாலட்சுமி திருமண மண்டபம், ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-159ல் மீனம்பாக்கம், காமராஜர் சாலையில் உள்ள ஆதிதிராவிட மேல்நிலைப்பள்ளி, சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்-15), வார்டு-195ல் துரைப்பாக்கம், ஏலீம் மெட்ரிகுலேசன் பள்ளி ஆகிய 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் ஜாதி சான்றிதழ் பெறுவது, பட்டா மாற்றம், பென்ஷன் தொடர்பான மாற்றங்கள், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்வது, மருத்துவ காப்பீடு அட்டை பெறுவது, ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்வது, ரேஷன் அட்டையில் மாற்றங்களை மேற்கொள்வது என பல்வேறு சேவைகளையும் மக்கள் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த சேவைகளை பெறுவதற்காக மக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டிய அவசியம் கிடையாது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி நகர் புறங்களில் 13 துறைகள் சம்பந்தப்பட்ட 43 சேவைகளும் கிராமப்புறங்களில் 15 துறைகள் சம்பந்தப்பட்ட 46 சேவைகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு எந்தெந்த பகுதியில் முகாம்கள் நடைபெறுகின்றன இந்த முகாம்களில் என்னென்ன சேவைகளை பெறலாம் என்பன உள்ளிட்ட விவரங்களை மக்கள் எளிமையாக தெரிந்து கொள்வதற்காக அரசு உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் ஒரு பிரத்தியேக இணையதளத்தையே தொடங்கி இருக்கிறது. இந்த இணையதளத்தின் மூலம் உங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் பெறமுடியும்.
தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ள https://ungaludanstalin.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக நாள்தோறும் எங்கெல்லாம் முகாம் நடைபெறும் என்பதை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த இணையதளம் மூலமாக தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் எங்கு முகாம்கள் நடைபெறுகிறது என்பதை அறிந்து கொண்டு அந்த முகாம்களில் கலந்து கொண்டு அரசு சேவைகளை பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முகாமில் மக்கள் எந்தெந்த துறை சார்ந்த சேவைகளை பெற முடியும் என்ற விவரங்களும் அதில் விரிவாக பதிவிடப்பட்டிருக்கின்றன. இது தவிர அரசு தன்னார்வலர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் தொடர்பான விழிப்புணர்வு கையேட்டையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.