அமெரிக்காவின் ஹாலிவுட் ஸ்டூடியோ இருக்கும் அமைவிடமான லாஸ் ஏஞ்சல்ஸ் மாநகரில் தற்போது கட்டுக்கடங்காத கலவரம் நடைபெற்று வருகிறது . ஹாலிவுட் ஸ்டுடியோவும் , ஹாலிவுட் நடிகர்களும் தங்கியுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வன்முறை நடைபெறுவது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. நகரம் முழுக்க வீதிகளில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளன. சாலை முழுக்கவும் கலவரக்காரர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுமக்களும் ஹாலிவுட் பிரபலங்களும் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மட்டும் பற்றி எரிகிறது என்று நாம் முடிவுக்கு வர முடியாது. அமெரிக்காவின் ஒவ்வொரு பெரிய நகரங்களும் எரிந்து கொண்டு தான் உள்ளன. ஹாலிவுட் நகரில் பற்றிய நெருப்பு வல்லரசு நாட்டின் வர்த்தக தலைநகரான நியூயார்க் வரை பரவி எரிந்து கொண்டு தான் உள்ளது. அமெரிக்காவின் சிறிய நகரங்களில் கூட போராட்டக்காரர்கள் அங்கங்கே கலவரத்தில் ஈடுபட்டுக் கொண்டு தான் உள்ளனர்.
ஒவ்வொரு தெருக்களிலும் காணப்படும் அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீ வைக்கும் போக்கு கலவரக்காரர்களிடம் இருக்கிறது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல் துறையும் வன்முறையில் இறங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பல இடங்களில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் உயிரிழப்புகள் ஏதும் இருந்ததாக தெரியவில்லை . சில இடங்களில் குதிரையில் வரும் காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றனர்.
சில இடங்களில் காவல் துறையினர் ரப்பர் தோட்டாக்களால் கலவரம் செய்பவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துகின்றனர் . ரப்பர் தோட்டாக்களால் சுடப்படும் போது உயிரிழப்பு ஏற்படாது , ஆனால் காயம் ஏற்படும் . சில தோட்டாக்கள் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் பாய்ந்தது. காவலர்கள் சில இடங்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்,கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. நிலைமை கட்டுக்கடங்காமல் இருப்பதால் தேசிய காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறைக்கு காரணம்:
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும் குடியுரிமை சட்டங்களை கடுமையாக்கியுள்ளார். இதனால் சட்ட விரோதமாக குடியேறிய மக்களை நாடு கடுத்தும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அனைத்து சட்டவிரோத குடியேறிகளும் கைது செய்யப்பட்டு தங்கள் நாட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். இது தொடர்பாக, ஜூன் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. பின்னர் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு குடியுரிமை இல்லாதவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதனால் , சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சில இடங்களில் காவல் துறையினர் , அமெரிக்க அதிகாரிகளையும் கலவரக்காரர்கள் தாக்கியுள்ளனர். மேலும் அமெரிக்கக் கொடிகள் எரிக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டது. பல போராட்டக்காரர்கள் மெக்சிகன் கொடிகளை கையில் ஏந்தியபடி வன்முறையில் ஈடுபட்டனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த அமெரிக்க அதிபர் 2000 தேசிய காவலர்களை பாதுகாப்பிற்கு அனுப்பினார். ஆனால் , டிரம்ப் தேசிய காவலர்களை, மாநில கவர்னர் அனுமதியின்றி அனுப்பியது பெரிய சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
அமெரிக்காவின் சட்டப்படி, ஆளுநரின் வேண்டுகோளின் பேரில் மட்டுமே மாநிலத்திற்கு தேசிய காவல்படை அனுப்ப வேண்டும் என்ற விதி உள்ளது. இதனால் கலிபோர்னியா கவர்னருக்கும் அமெரிக்கா அதிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.