

எங்காவது வெளியே சென்ற சமயத்தில் கையில் ஏடிஎம் கார்டு இல்லாமல் போனால் பிரச்சினையே இல்லை. இந்த வசதியைப் பயன்படுத்தி பணம் எடுக்கலாம். வாங்க அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்...
வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமல் சுலபமாக பணத்தை எடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் ஏ.டி.எம். மையங்கள். அதன் மூலம் டெபிட் கார்டை பயன்படுத்தி நமக்கு தேவையான பொழுது, தேவையான அளவில் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது. பின்னாளில் மாதத்திற்கு இத்தனை முறை டெபிட் கார்டை கொண்டு ஏ.டி.எமில் பணம் எடுக்க வேண்டும்.
அதற்கு மேல் கார்டை ஸ்வைப் செய்தாலோ, ஏ.டி.எமில் பணம் எடுத்தாலோ அல்லது வேறு வங்கிகளின் ஏ.டி.எம்களில் பணம் எடுத்தாலோ அதற்கான கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் டெபிட் கார்டு பயன்பாட்டை குறைத்து கொண்டு UPI முறையிலான பணப்பரிவர்த்தனைகளுக்கு மாறினர்.
பெரும்பாலான பணம் செலுத்துதல்கள் டிஜிட்டல் வடிவங்கள் அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் செய்யப்படுகின்றன. இருப்பினும் பணப்புழக்கம் தேவையின் காரணமாக இன்னமும் பெரும்பாலான மக்கள் ஏ.டி.எம் மையங்களை நம்பியிருக்கிறார்கள்.
இருப்பினும் சில சமயங்களில் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தும் போது சில தொழில்நுட்ப கோளாறு, கடவுச்சொல் மறப்பது, ஏ.டி.எம் கார்டையே மறந்துவிட்டு ஏ.டி.எம் மையங்களுக்கு செல்வதும் போன்ற நிகழ்வுகள் நடப்பதுண்டு. இப்படியான சூழலில் வந்திருப்பது தான் தொழில்நுட்ப வசதியைக் கொண்டு ஏ.டி.எம் கார்டே இல்லாமல் ஏ.டி.எமில் இருந்து பணம் எடுக்கும் முறை. அதாவது ஏடிஎம் கார்டு இல்லாமலேயே நம்மால் பணம் எடுக்க முடியும். அதனை எப்படி மேற்கொள்வது என்பதை பின்வரும் வழிமுறைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இன்டர்ஆப்பரேபிள் கார்டு இல்லாத கேஷ் வித்ட்ராவல் (ICCW) முறை மூலம், ஏடிஎம் கார்டு அல்லது கிரெடிட் கார்டுக்குப் பதிலாக யூபிஐ செயலியைப் பயன்படுத்தி ஏடிஎம்களில் இருந்து பணத்தை எடுக்க முடியும். இது ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க ஒரு பாதுகாப்பான வழியாகும். இந்த சேவையை நாடு முழுவதும் வாரத்திற்கு 7 நாட்களும் 24 மணி நேரமும் பெற முடியும்.
உங்கள் மொபைல் பின் நம்பரைப் பயன்படுத்தி பணத்தை எடுக்கும் இந்த முறையில் நீங்கள் பணம் எடுப்பதற்கு தினசரி வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீங்கள் ஒரு நாளைக்கு 5,000 ரூபாய் வரை எடுக்கலாம். இருப்பினும், சில வங்கிகள் இந்த வரம்பை ஒரு நாளைக்கு ரூ.10,000 ஆக உயர்த்தியுள்ளன.
முதலில் ஒரு ஏடிஎம்மிற்குச் சென்று, ஏடிஎம் மெனுவில் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி(card-less cash withdrawal) அல்லது UPI மூலம் பணத்தை எடுக்கும் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்த பின்னர் அதில் யூபிஐ வழியாக அடையாளத்தை வழங்குவதற்கான விருப்பத்தை பார்க்கலாம். அதன் பின்னர், உங்கள் மொபைல் போனில் UPI செயலியை ஓப்பன் செய்து QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். பணத்தை மாற்ற யூபிஐ செயலியில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த செயல்முறை ஒரு ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுப்பதைப் போன்றே இருக்கும். உங்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்கு ஏற்ப தொகையை உள்ளிட்டு பணத்தை எடுக்கலாம்.
இப்படியாக ATM கார்டு இல்லாமல் ATM-ல் பணம் எடுக்கும் முறை பல்வேறு மோசடிகளில் சிக்காமல் இருக்கவும் உதவுகிறது.