

இந்தியா கச்சா எண்ணெயை பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்கிறது. குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை வாங்கிய இந்தியாவின் செயலுக்கு எதிராக, கடந்த ஆண்டிலிருந்தே அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதன் காரணமாகவே இந்தியா மீதான வரியை அதிகரித்தது அமெரிக்கா.
இதன்படி ரஷ்யாவிடம் எவ்வித வர்த்தக தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்தது அமெரிக்கா. ஆனால் எதற்கும் கட்டுப்படாத இந்தியா, தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வந்தது. இருப்பினும் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கும் முடிவைத் திரும்பப் பெற்றது இந்தியா. இதன்படி அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கியது.
இதற்கிடையில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போரின் போது ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி அளித்திருந்தது.
நேற்று முன்தினம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% சுங்க வரியை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்து, கையெழுத்திட்டார். இதனால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று டொனால்ட் டிரம்ப் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பதால் மீண்டும் இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த 100% சுங்க வரி பொருந்தும். அதிபர் டிரம்ப் கையெழுத்திட்ட 30 நாட்களில், 100% வரி விதிக்கும் சட்டம் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும். இதனால் இந்திய வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.
ஏற்கனவே அமெரிக்கா வரி விதித்த போது, அதனை ஈடு செய்ய மத்திய அரசு உள்நாட்டு வரியை குறைத்தது. இந்நிலையில் மீண்டும் வரிவிதிப்பு விதிக்கப்பட்டிருப்பதால், இதனை மத்திய அரசு எப்படி கையாளப் போகிறது என்பது நடக்கவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா உடனான வர்த்தக உறவை இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் துண்டித்தால் மட்டுமே அமெரிக்காவின் இந்த வரி விதிப்பில் இருந்து தப்பிக்க முடியும் என கூறப்படுகிறது. மேலும் இந்தியாவின் ஏற்றுமதியும் முடங்கும் அபாயத்தில் இருப்பதால், மத்திய அரசு விரைந்து தீர்வு காண வேண்டியது அவசியம்.
கடந்த வாரம் தான் இந்தியாவில் 18 வது பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குளோபல் சவுத் நாடுகள் விதிமுறைகளை பின்பற்றும் நாடுகளாக மட்டுமே அல்லாமல், விதிமுறைகளை உருவாக்கும் நாடுகளாகவும் வளர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் குளோபல் சவுத் நாடுகளை அடக்கி வைக்கும் முயற்சியில் அமெரிக்கா வரி விதிப்பை சட்டமாக்கி இருப்பதற்கு பல்வேறு நாடுகள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.