தை பிறந்தால் வழி பிறக்கும்..! 50%-லிருந்து 18%-ஆக குறைந்த அமெரிக்க வரி: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் உற்சாகம்..!

மாதிரி படம்
மாதிரி படம்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

அமெரிக்க வரி குறைப்பால் தொழில் வளர்ச்சிக்கு அமோகமான வாய்ப்பு என்று ஏற்றுமதியாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

அமெரிக்கா தனது இறக்குமதி வரியை 50% இலிருந்து 18% ஆக குறைத்ததையடுத்து கடும் பாதிப்பிலிருந்த திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி துறைக்கு நிம்மதியும் புதிய உற்சாகமும் கிடைத்துள்ளது. முன்னதாக அமெரிக்கா விதித்த கடுமையான வரிகளால் திருப்பூரில் இருந்த ஏற்றுமதி நிறுவனங்கள், தங்களின் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக 20% முதல் 25% வரை தள்ளுபடி வழங்கி நஷ்டத்தை சந்தித்தன. இப்போது இந்த நிலை மாறும் என்று நம்பப்படுகிறது.

அமெரிக்காவின் தற்போதைய வரி மாற்றங்கள் திருப்பூர் பின்னலாடை தொழில்துறையில் ஒரு நம்பிக்கையான சூழலை உருவாக்கியுள்ளது. 2025 ஆகஸ்ட் முதல் அமெரிக்க அரசு இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50% வரை வரி விதித்ததால் திருப்பூரின் ஏற்றுமதி ஆர்டர்கள் பெருமளவில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த இழப்பை சமாளிக்க திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை நோக்கி தீவிரமாக செயல்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நேற்றிரவு பிரதமர் மோடி-அதிபர் டிரம்ப் பேசியதன் மூலம் இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 18% குறைத்துள்ளதால் தொழில் பன்மடங்கு வளர்ச்சி பெறும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: வரி குறைப்பு மட்டும் அல்லாமல் அபராத வரியும் நீக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு 35% பாகிஸ்தானுக்கு 19% இந்தோனேசியாவுக்கு 19% வியட்நாமுக்கு 20% அமெரிக்கா வரி விதித்துள்ள நிலையில் இந்தியாவுக்கு மட்டும் 18% என குறைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி தருவதாகவும், இதனால் ஆடை சார்ந்த தொழில் பன்மடங்கு வளர்ச்சி பெறும் என்றும் கூறியுள்ளார்.

அனைத்து ஜவுளி ஏற்றுமதி முகமைகள் கூட்டமைப்பு தலைவர் இளங்கோவன், தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம் முன்னோர்கள் கூறுவது போல ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி தொழிலுக்கு தை மாதத்தில் வழி பிறந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி குறைப்பு, அமெரிக்க வரிக்குறைப்பு ஆகியவற்றால் திருப்பூர் தொழில் துறைக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.இந்த வரிக் குறைப்பை பயன்படுத்தி உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தி திறனை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த வரிச் சலுகையின் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல புதிய ஆர்டர்கள் மீண்டும் வரும் எனவும், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி மையம் புத்துயிர் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தூய்மை பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு ரஜினிகாந்த் அளித்த அன்பு பரிசு..!
மாதிரி படம்
logo
Kalki Online
kalkionline.com