

அதிவேக பயணத்தை உறுதி செய்யும் வகையில், நாட்டில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையொட்டி வந்தே பாரத் ரயில்களின் பெட்டிகளை அதிகரித்தும், படுக்கை வசதி கொண்ட ரயில்களை அறிமுகப்படுத்தியும் ரயில்வே துறை பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் தற்போது ‘வந்தே பாரத் 4.0’ என்ற புதிய திட்டத்தை தொடங்கவுள்ளது ரயில்வே துறை. நாடு முழுவதும் பெரிய நகரங்களை இணைக்கும் வகையில் சுமார் 170-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அமரும் வகையிலான வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், கடந்த ஜனவரி 17 ஆம் தேதி படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.
படுக்கை வசதி கொண்ட முதல் வந்தே பாரத் ரயில் அசாமின் கவுஹாத்தி முதல் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா வரை இயக்கப்பட்டது. படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களில் RAC டிக்கெட் வசதி கிடையாது என்றும், இதில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.960 என்றும் ரயில்வே துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ‘வந்தே பாரத் 4.0’ என்ற புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அடுத்த 18 மாதங்களில் இத்திட்டத்தை முடிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வந்தே பாரத் ரயில்களின் அடுத்தடுத்த அறிமுகங்கள், பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வெற்றி அடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அடுத்த 18 மாதங்களில் வந்தே பாரத் 4.0 ரயில் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்தியாவின் சொந்த ரயில் சிக்னல் அமைப்பான கவச் 5.0 உடன், வந்தே பாரத் 4.0 இணைக்கப்படவுள்ளது.
சர்வதேச அளவிலான தரம் மற்றும் பாதுகாப்பு அளவுகோல்களை பூர்த்தி செய்யும் வகையில் வந்தே பாரத் 4.0 ரயில் உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் அதிவேக பயணத்தில், அதிநவீன பாதுகாப்பு வசதிகளும் உறுதி செய்யப்படும். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் ரயில் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடிய விரைவில் படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வந்தே பாரத் 4.0 திட்டமும் அமலுக்கு வரவுள்ளதால், பயணிகளுக்கு அதிவேகப் பயணத்தை பாதுகாப்பான வசதிகளுடன் அளிக்க ரயில்வே துறை மும்முரமாக செயல்பட்டு வருகிறது.