இனி அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ கட்டாயம்: நாடு முழுவதும் அமல்!

Vande Mataram
Vande Mataram
Published on

நாட்டில் அனைத்து அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலுக்கு முன்பாக, தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ கட்டாயமாகப் பாடப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் ‘வந்தே மாதரம்’ பாடப்படும் போது, அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும், இந்தப் புதிய விதிமுறை குறிப்பிடுகிறது. 3.10 நிமிடங்கள் கொண்ட 6 சரணங்களையும் முழுமையாக பாட வேண்டும்.

* நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வழங்கும் விழா, ஆளுநர், குடியரசுத் தலைவர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவரின் வருகை மற்றும் புறப்படும் நேரங்களில் ‘வந்தே மாதரம்’ ஒலிக்கப்பட வேண்டும்.

* திரையரங்குகள் போன்ற பொது இடங்களிலும் இந்தப் பாடல் ஒலிக்கப்படும். இருப்பினும் அங்கு பொதுமக்கள் எழுந்து நிற்க வேண்டிய கட்டாயமில்லை.

கடந்த 1937-ம் ஆண்டு வந்தே மாதரம் பாடலில் இருந்து, காங்கிரஸ் நீக்கிய 4 சரணங்களையும் சேர்த்து, இப்போது முழு 6 சரணங்களும் பாடப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்பு சட்டத்தின் படி, ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும், தேசிய கீத நடைமுறைகளை விரிவுபடுத்த கடந்த மாதம் திட்டமிடப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் தற்போது தேசிய கீதம் மற்றும் தேசிய பாடலை அவமதித்தாலோ, அல்லது பிறர் மரியாதை செலுத்தும் போது தடுத்தாலோ அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த உத்தரவுடன், ஏற்கனவே நீக்கப்பட்ட 4 சரணங்களை மீண்டும் சேர்த்திருப்பது, இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டில் பாஜகவும், காங்கிரஸும் தேசிய கீதம் தொடர்பான விவகாரத்தில் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டன.

வந்தே மாதரத்தின் 150ஆம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியை ஒட்டி, பாராளுமன்றத்தில் நடந்த விவாதம் கடுமையான வாக்குவாதமாக மாறியது. ஏற்கனவே நீக்கப்பட்ட சரணங்களில் துர்கை உள்ளிட்ட மூன்று இந்து தேவிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீக்கபபட்ட சரணங்கள்:

பெங்காலி எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, 1875-ம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஊக்கமளிக்க ஒரு கவிதையை எழுதினார். அந்தக் கவிதை 1882-ம் ஆண்டு வெளியான அவரது ‘ஆனந்தமத்’ நாவலில் இடம்பெற்றது. அந்தக் கவிதை தான் பிற்காலத்தில் நாட்டின் தேசிய பாடலான வந்தே மாதரமாக உருவெடுத்தது.

சட்டர்ஜி சரணங்களை எழுதும் போது, குறிப்பிட்ட 6 சரணங்களில், இந்தியாவை தெய்வீகத் தாயாக சித்தரித்து, அறிவு, உணர்வு மற்றும் உடல் வலிமையைக் கொடுக்கும் தாயாக அவர் புகழ்ந்தார்.

கவிதையில் தாயின் வீரத்தையும், மென்மையையும் வர்ணித்தார். ஆனால் அதற்குப் பின் வரும் சரணங்களில் குறிப்பாக கடைசி இரண்டில், இந்து தேவிகளான துர்கை, கமலா (லக்ஷ்மி) மற்றும் சரஸ்வதி ஆகியோரைக் குறிப்பிட்டு, நாட்டின் பெண் காவலர்களாக சித்தரித்தார்.

இதையும் படியுங்கள்:
இனி எலக்ட்ரிக் கார் சர்வீஸ் வீட்டுக்கே வரும்.! மஹிந்திராவின் புதிய சேவை.!
Vande Mataram

நேரு தலைமையிலான காங்கிரஸ் கடந்த 1937ஆம் ஆண்டு, தேசிய நிகழ்வுகளில் முதல் 2 சரணங்களை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்தது. இந்து கடவுள்களை நேரடியாகக் குறிப்பிடுவது, முஸ்லிம் சமூகத்தினருக்கு ஏற்றதாக இருக்கவில்லை. அது ‘புறக்கணிப்பை’ உருவாக்கி விடும் எனக் கருதப்பட்டது.

ஆனால் பாஜக, காங்கிரஸின் இந்த சரண நீக்கங்கள், ‘பிளவு விதைக்கும்’ அரசியலை வெளிப்படுத்துவதாக உள்ளது என கூறியது. பிரதமர் மோடியும், அந்த சரணங்களை நீக்கியது “நாட்டின் பிளவுக்கான விதைகளை விதைத்து விட்டது” எனக் குறிப்பிட்டு, இந்தியப் பிரிவினையை சுட்டிக் காட்டினார்.

இந்நிலையில் இனி தேசிய பாடலான வந்தேமாதரத்தில் இந்து தேவிகளின் பெயர்களும் ஒலிக்கப்பட உள்ளது. மத்திய அரசு தீர்க்கமான முடிவு, இந்திய அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது

இதையும் படியுங்கள்:
அபிஷேக் சர்மாவுக்கா இந்த நிலைமை.! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.!
Vande Mataram

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com