
இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மூலம் பல இளம் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஐபிஎல் தொடரின் மூலமாக பல வீரர்கள் இந்திய அணிக்குள் நுழைந்துள்ளனர். அவ்வகையில் நடப்பாண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 14 வயதே ஆன ஓர் இளம் வீரர் அனைவரது கவனத்தையும் ஈர்த்து விட்டார்.
ஐபிஎல் தொடரோடு மட்டும் அவரது விளையாட்டு முடிந்து விடாமல், U-19 இந்திய அணியிலும் இடம் பிடித்து அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்து வந்தார். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே அந்த வீரரின் அதிரடியான ஆட்டத்தைக் கண்டு புகழ்ந்து தள்ளினர். இந்நிலையில் தற்போது 14 வயதில் துணைக் கேப்டனாகவும் ஆகிவிட்டார் அந்த இளம் வீரர். அவர் தான் பீகாரைச் சேர்ந்த வைபவ் சூரியவன்ஷி.
போட்டி நிறைந்த இன்றைய கிரிக்கெட் உலகில் ஒரு வீரருக்கு வாய்ப்பு கிடைப்பது என்பதே அரிதான ஒன்றாகி விட்டது. இந்நிலையில் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய தொடக்க காலத்திலேயே துணைக் கேப்டன் பதவி கிடைப்பதை அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்தியாவில் 91 வது ரஞ்சிக்கோப்பை தொடர் நாளை முதல் பல்வேறு நகரங்களில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன. இதில் எலைட் பிரிவில் 32 அணிகளும், பிளேட் பிரிவில் 6 அணிகளும் பங்கேற்க உள்ளன. ப்ளேட் பிரிவில் இடம்பெற்றுள்ள பீகார் அணி, முதல் இரண்டு ஆட்டங்களுக்கான அணியை அறிவித்தது. இந்த அணியில் 14 வயதான வைபவ் சூரியவன்ஷிக்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
பீகார் தனது முதல் ஆட்டத்தில் அருணாச்சல பிரதேசத்துடன் மோதுகிறது இந்த ஆட்டம் பாட்னாவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. அதுக்கு அடுத்த ஆட்டத்தில் மணிப்பூரை எதிர்கொள்ள இருக்கிறது பீகார் அணி. நடப்பு ரஞ்சிக்கோப்பைத் தொடருக்கு பீகார் அணயின் கேப்டனாக சகிபுல் கனி நியமிக்கப்பட்டுள்ளார். அதோடு யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சூரியவன்ஷி கடந்த 2023-24 ரஞ்சிக்கோப்பைத் தொடரில் முதன் முதலாக அறிமுகமானார். அப்போது அவருடைய வயது வெறும் 12 தான்.
அடுத்த ஆண்டிலேயே ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார் சூரியவன்ஷி. ராஜஸ்தான் அணியின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் கிரிக்கெட் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்து விட்டார். அதிலும் 35 பந்துகளிலேயே சதம் அடித்து சாதனையையும் படைத்தார்.
அதன் பிறகு U-19 இந்திய அணிக்கு தேர்வாகி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் பீகார் அணியின் துணை கேப்டனாக சூரியவன்ஷி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கிரிக்கெட் உலகில் மிகவும் வைரலாகி வருகிறது. ரஞ்சிக்கோப்பை தொடரிலும் சூர்யவன்ஷி முத்திரை பதித்து வெகுவிரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.