
இந்தியாவின் துணை ஜனாதிபதி தேர்தல் இன்று தலைநகர் டெல்லியில் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷணனும், காங்கிரஸ் கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று புதுடெல்லியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது. யார் அடுத்த துணை ஜனாதிபதி என்ற கேள்விக்கான பதில் இன்று மாலையே தெரிந்து விடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை 21 ஆம் தேதி ஜெக்தீப் தன்கர் துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார். அரசியல் வட்டாரத்தில் இந்த திடீர் ராஜினாமா பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உடல்நலக் குறைவால் தான் நான் ராஜினாமா செய்கிறேன் என ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் விளக்கமளித்தார் தன்கர். இந்நிலையில் துணை ஜனாதிபதி பதவியை வெகு நாட்களுக்கு காலியாக வைத்திருக்கக் கூடாது என்ற சட்ட விதிகளின் படி, அடுத்த சில நாட்களிலேயே தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மகாராஷ்டிரா கவர்னரான சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது பாஜக. அதேசமயம் பாஜகவுக்கு போட்டியாக பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டது. ஆகையால் தெலங்கானாவைச் சேர்ந்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான சுதர்சன் ரெட்டியை துணை ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறக்கி விட்டது காங்கிரஸ்.
இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவினாலும், அதிக எம்பிக்கள் பாஜக வசமே உள்ளனர். இதனால் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இருவரில் யார் வெற்றி பெற்றாலும், அடுத்த துணை ஜனாதிபதி தென்னிந்தியாவைச் சார்ந்தவர் என்பதில் சந்தேகமில்ல. தற்போது பாராளுமன்ற மக்களவையில் 542 எம்பிக்களும், மேல்சபையில் 228 எம்பிக்கள் மற்றும் 12 நியமன எம்பிக்களும் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள்.
மொத்தமுள்ள 782 எம்பிக்களில் 392 வாக்குகளைப் பெற்றால் தேர்தலில் வெற்றி பெறலாம். இரு அவைகளையும் சேர்த்து பாஜகவிற்கு மொத்தம் 422 எம்பிக்கள் இருப்பதால், வெற்றி பாஜகவிற்குத் தான் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் காங்கிரஸ் வெற்றியை அவ்வளவு சுலபமாக விட்டுக் கொடுக்காது என்பதால், இன்றைய தேர்தலில் பரபரப்புக்கு பட்சம் இருக்காது என்றே கருதப்படுகிறது.
துணை ஜனாதிபதி தேர்தல் இன்று புதுடெல்லியில் ரகசிய வாக்குச்சீட்டு முறையில் காலை 10 மணி முதல் மாலை 5 வரை நடைபெற உள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அறை எண் F-101 என்ற அரங்கில் தேர்தல் நடைபெறும். துணை ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரியாக மேல்சபை செயலாளர் பி.சி. மோடி நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்துக் கட்சி எம்பிக்களும் டெல்லிக்கு படையெடுத்து வருகின்றனர். இன்று மாலை தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.