

சட்டமன்றத் தேர்தல் களத்தில் வெற்றிக்காகப் பணியாற்றி வரும் கட்சி நிர்வாகிகளின் பரப்புரை மற்றும் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு போன்ற காரணங்களால் அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இச்சூழலில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரக் கூட்டம் நாளை சேலத்தில் நடைபெறவுள்ளது.
சுமார் ஒன்றரை மாதங்கள் கழித்து மீண்டும் மக்களிடையே அக்கட்சியின் தலைவர் விஜய் பேசுவது குறிப்பிடத்தக்கது. இந்த பிரசாரக் கூட்டத்திற்கு கடந்த டிசம்பர் மாதமே அனுமதி கேட்டு அந்த மாவட்ட செயலாளர் மற்றும் தவெக-வினர் காவல் துறையில் மனு அளித்திருந்தும் சில பாதுகாப்புக் காரணங்களுக்காக கூட்டத்துக்கு காவல் துறை தரப்பில் இருந்து அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் தவெக சார்பில் மீண்டும் காவல்துறை அனுமதி கேட்டு அணுகியது. ஆனால் இம்முறை பொதுமக்கள் சந்திப்புக் கூட்டமாக இல்லாமல் தவெக நிர்வாகிகளுடனான சந்திப்புக் கூட்டமாக நடத்த அனுமதி அளிக்குமாறு கேட்கப்பட்டிருந்தது.
இதைப் பரிசிலித்த காவல்துறை சேலம் சீலநாயக்கன்பட்டி தாளமுத்து-நடராஜன் திடலில் பிப்ரவரி 13-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்கு அனுமதி அளித்தனர். இதையடுத்து, விஜய் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு காவல் துறை தரப்பில் இருந்து விஜய் வேனில் நின்றபடிதான் பேச வேண்டும், தவெக நிர்வாகிகளுக்கு இருக்கைகள் போடப்படாது, மொத்தம் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும், பங்கேற்கும் அனைவருக்கும் அனுமதி அடையாள அட்டை வழங்க வேண்டும், வயது முதிர்ந்தோர், குழந்தைகள் , கர்ப்பிணிகள், உடல் நலம் குன்றியோருக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட 51 நிபந்தனைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கூட்டத்துக்கு தூணாக நின்று பணியாற்றும் தவெக-வின் சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் சில நாட்கள் முன் தன்னார்வலர்களான கட்சி நிர்வாகிகளைக் கூட்டி ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார். மேலும் கூட்டம் நடக்கும் இடத்துக்கு நேரடியாக வந்து கட்சி செயலாளர் ஆனந்த் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "கட்டுப்பாடுகளின்படி குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் இக்கூட்டத்திற்கு வர வேண்டாம். விவசாயம், நெசவு என வரலாற்றுச் சிறப்புமிக்க சேலத்தில் நடைபெறும் இக்கூட்டம் நிச்சயம் வெற்றி பெறும். விஜய் முதல்வராக உழைக்கும் கட்சி நிர்வாகிகளுக்குப் பாராட்டுகள்," என்று தெரிவித்தார்.
இக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி கிடைத்தாலும் பொதுமக்களுக்கு நேரடி வருகை இல்லை என்பதும் நிர்வாகிகளுக்கான கூட்டம் மட்டுமே எனப்படுகிறது. இதற்கு சான்றாக 4998 பேர் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டிருப்பதும், அனுமதி சீட்டு பெறாத நிர்வாகிகளும் பொதுமக்களும் நேரில் வருவதை கண்டிப்பாக தவிர்க்கவும் த.வெ.க. தலைமை கூறியிருக்கிறது. மேலும் ரசிகர்கள் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடி, நேரடியாக தொலைக்காட்சியிலும், சமூக வலைத்தளத்திலும் இந்நிகழ்ச்சியை நேரடியாக காண வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாளை நடக்கும் தவெக நிர்வாகிகள் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் யாரும் உள்ளே நுழையாதவாறு திடலை சுற்றி உயரமான வேலிகள் போடப்படுகிறது. மற்றும் 5000 நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்க இருக்கும் அதில் தலா 200 பேர் வீதம் 20 தனித்தனி பிளாக்குகள் அமைத்து பாதுகாப்பு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்துக்கு வருபவர்கள் அனைவருக்கும் காவல்துறையின் அறிவுரையின்படி அடையாள அட்டை வழங்கப்படுகிறது. காவல்துறை கண்காணிப்பில் வருபவர்களுக்காக பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்தக் கூட்டத்தை ஒழுங்குபடுத்த 850 தவெக தொண்டர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 100 பெண்களும் பங்கேற்றுள்ளது சிறப்பு.
'விஜய்யின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் வரலாறு படைப்பதாக அமைந்து வருகிறது. இந்த சேலம் கூட்டமும் வரலாறு படைக்கும் நிகழ்வாக அமையும்' என கட்சி நிர்வாகிகள் கூறிவருகின்றனர்.