விஜய் கட்சி தொடங்கியதால் எந்த பிரயோஜனமும் இல்லை, அவர் ஒன்றையும் சாதிக்க முடியாது என்று ரஜினிகாந்த் சகோதரர் சத்திய நாராயண ராவ் பேசியிருக்கிறார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் விஜய் கட்சி தொடங்கினார். இதனையடுத்து பெயர், கட்சிக்கொடி, சின்னம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. இதனையடுத்து பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சமீபத்தில் தவெக கட்சியின் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் பல லட்சக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். விஜய் ஆவேசமாகவும் கலகலப்பாகவும் பேசினார். பலரும் இதற்கு விமர்சனங்கள் செய்தனர்.
இதுவரை அதிமுக தவிர மற்ற கட்சிகள் விஜயை எதிர்க்கும் விதமாகத்தான் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு அவர் எந்தவித பதிலும் சொல்லாத நிலையில், திடீரென்று கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மட்டுமே கலந்துக்கொண்டனர். அப்போது விஜய் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் சொல்ல வேண்டாமென்றும், சிலவற்றிற்கு மட்டும் சரியான முறையில் பதிலளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அந்தவகையில், ரஜினிகாந்த் சகோதரர் மீனாட்சியம்மன் கோவில் சாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “விஜய் கட்சி தொடங்கியதில் எந்த பிரயோஜனமும் இல்லை, தமிழகத்தில் எதுவும் சாதிக்க முடியாது, முயற்சி செய்து பார்க்கட்டும். அரசியலுக்கு வர அனைவருக்கும் உரிமை உள்ளது. அரசியல் ஆசை விஜய்க்கு உள்ளதால், கட்சி தொடங்கி உள்ளார், வந்தபின் என்ன செய்ய போகிறார் என்பது தெரியாது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் ஆனால், தமிழ்நாட்டில் விஜயால் ஜெயிக்க முடியாது. அது கஷ்டம்.” என்று பேசியிருக்கிறார்.
இது இணையத்தில் வேகமாகப் பரவி வருவதோடு, சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தவெக மாநாடு முடிந்ததும் பல கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தொடர்ந்து விமர்சனங்கள் கொடுத்து வரும் நிலையில், தற்போது இவரின் விமர்சனம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த், மாநாடு நல்ல படியாக வெற்றிபெற்றதாக சொல்லி விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.