தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் 2026 ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றி கழகம் முதல் முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்க இருக்கிறது. முதல் தேர்தலிலேயே வெற்றிக்கனியை பறித்து விட வேண்டும் என்று அக்கட்சி ஆர்வம் காட்டி வருகிறது. சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் சின்னம் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.
தேர்தல் கமிஷன் விதிகளின்படி பதிவு செய்துள்ள புதிய கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கு 5 முதல் 10 சின்னங்களை தாங்கள் விரும்பும் வகையில் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று அவகாசம் அளித்திருந்தது. அதன்படி இந்தக் கட்சி சில குறிப்பிட்ட சின்னங்களை குறிப்பிட்டு அதில் ஒன்றை ஒதுக்க கேட்டிருந்தது.
இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 'மோதிரம்' சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசியல் சூழல் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் நிலையில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மேற்கொண்டு வரும் அரசியல் நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்துக் கொண்டு வருகின்றன. தனது கட்சியின் பிரச்சாரத்தை ஏற்கனவே துவங்கிவிட்ட நிலையில், கட்சிக்கு தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை வழங்கப்போகிறது என்ற ஆர்வம் அனைவரும் உள்ளத்திலும் இருந்து வந்தது.
ஆட்டோ, விசில், பேட், பூமி உருண்டை, மோதிரம் போன்ற பல சின்னங்களை தேர்வு செய்யும் முன்மனுவை தமிழக வெற்றி கழகம் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்திருந்தது. த.வெ.க சார்பில் 'ஆட்டோ' சின்னம் கேட்கப்பட்டதாகவும், ஆனால் அந்தச் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் கேரளாவில் உள்ள ஒரு கட்சிக்கு ஒதுக்கி உள்ளதால் த.வெ.கவிற்கு வேறொரு சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அந்தச் சின்னம் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு 'மோதிரம்' சின்னம் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விஜய் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் பயணத்தில் இது முக்கியமான அடி என்றும், சின்னம் எதுவாக இருந்தாலும் விஜய் தலைமையில் வெற்றி நிச்சயம் என்று தொண்டர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.